தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் உயிரை கொடுப்பது பாஜகவின் தொண்டனாகதான் இருப்பான் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பாக கோயம்பேடு பகுதியில் அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதற்காக மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், தமிழிசை செளந்தரராஜனின் நடவடிக்கையை பார்த்தால், அவரின் தந்தை குமரி ஆனந்தன் அவருக்கு தமிழிசை என்று பெயர் வைத்ததற்காக வருத்தப்படுவார் என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் பாஜக தரப்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:-
சாமானிய மக்களின் தேவையாக புதிய கல்விக் கொள்கையும், மும்மொழிக் கொள்கையும் உள்ளது. திமுக இணையதளவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கிறேன். மீண்டும் மீண்டும் இந்தியிசை, இந்திக்காக போராடுகிறார்கள் என்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய போது கூட மும்மொழி என்று கூறி, 3வது மொழியாக தெலுங்கில் தான் வாழ்த்தினேன். ஏனென்றால் அது நமக்கு சகோதர மொழி. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரியின் பதிவில் இருந்தே தேவையென்றால் 3வது மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று பதிலளித்தார். வயதான பின் தெலுங்கு கற்றுக் கொள்வது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால் நம் குழந்தைகள் இலகுவாக கற்றுக் கொள்ள முடியும். அதனால் 2 மொழியோ, 3 மொழியோ மட்டுமல்ல.. 4 மொழிகளை கூட கற்றுக் கொள்ளும் தன்மை குழந்தைகளுக்கு உள்ளது. அதனால் தேவையென்றால் 3வது மொழி கற்றுக் கொள்ளலாம் என்பதைவிட, தற்போது 3வது மொழி தேவை என்ற நிலை உள்ளது.
ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், பின்னர் இன்பநிதி என்று இந்த ஆட்சியே அப்பப்பா ஆட்சியாக சென்று கொண்டிருக்கிறது. திணிக்காத இந்தியை இவர்கள் திணித்து கொண்டிருக்கிறார்கள். இந்திக்காக போராடுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். தமிழுக்கு எதிராக இருப்பதை போல் சித்தரிக்கிறார்கள். பாஜகவுக்கு தமிழ் உயிர் போன்றது. தமிழுக்கு ஒரு பிரச்சனையென்றால் முதலில் உயிர் கொடுப்பது பாஜக தொண்டனாகதான் இருப்பான். உங்களை போல் ஆங்கிலத்திற்கு வென்சாமரம் வீசிக் கொண்டு, வெளி வேஷம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. மீண்டும் சொல்கிறேன்.. தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.