அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கிறது: டி.டி.வி. தினகரன்!

அதிமுக இப்போது மிகவும் பலவீனமாக இருப்பதாக அமமுக பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இன்று சனிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் கூட்டணியின் தலைவர் அண்ணாமலைதான். அவர் இது தொடர்பாக ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் இருந்து திமுகவை வீழ்த்த தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு ஒரு சில தலைவர்கள் தடையாக இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் விழிப்படைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இல்லையெனில் 2026 தேர்தலுக்குப் பிறகு இரட்டை இலை காணாமல் போய்விடும்.

இப்போது அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் தலைமையில் இருந்த இரட்டை இலை இப்போது இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். கடந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இப்போது அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் ஜெயலலிதாவாக ஆக முடியாது. எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். நாங்கள்தான் திமுகவுக்கு மாற்று சக்தியாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.