அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் கோமாளி குறித்த கேள்விகளை முன் வைக்க வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் 4 மற்றும் 5வது தளங்களில் செயல்படும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுவகைகளை விநியோகம் செய்யும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்திற்கு தொடர்புடைய அக்கார்ட் டிஸ்லரிஸ் அண்ட் பிவெரெஜஸ் பிரைவெட் லிமிடெட், எஸ்.என்.ஜே குழுமம், கால்ஸ் குழுமம், எம்.ஜி.எம் குழுமம் ஆகிய மதுபான ஆலைகளின் தலைமை அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.
மேலும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 3 நண்பர்கள் வீட்டிலும் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர், கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி ஆகியோரது இல்லங்களில் கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த மூன்று நபர்களின் வீட்டிலும் கடந்த 2023ஆம் ஆண்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மது கொள்முதல் எண்ணிக்கை குறித்த கணக்குகள் காண்பிக்காமல் முறைகேடாக நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் செல்வதாகவும், இது குறித்த கணக்குகள் டாஸ்மாக் நிறுவன ஏடுகளில் பதிவாவது இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் கலால் வரி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மைச்சர் செந்தில் பாலாஜியிடம் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் கோமாளி குறித்த கேள்விகளை முன் வைக்க வேண்டாம். அவர் ஒரு நிலைப்பாட்டில் இருந்தது இல்லை. காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்று பேசக் கூடியவர் அவர். இதுவரை தெளிவான கருத்தை முன் வைத்து இல்லை. அரசின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பணிகள் உள்ளது. இன்னும் செய்ய வேண்டிய திட்டங்கள் உள்ளது. அந்த பணிகளை வேகப்படுத்தி வருகிறோம். மக்களுக்காக முதலமைச்சர் குறித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அவர்களால் என்ன பயன். இது மக்களுக்கான அரசு, சிலர் சோஷியல் மீடியாவில் லைவில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இதை பத்திரிகை தொலைக்காட்சியில் சொன்னால் கேள்வி கேட்பீர்கள் என்பதால் இதை பேசுகிறார்கள். யார் மக்களுக்கான அரசை நடத்துகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.