அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்ஜியசபா எம்.பி சீட் ஒதுக்குவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ராஜ்ஜியசபாவில் தமிழ்நாட்டில் இருந்து 18 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதில் 6 எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை எம்பி தேர்தலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் அதிமுக ஆதரவுடன் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித அவர் கூறியதாவது:-
பெண்கள் பாதுகாப்பு பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும், மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டு இருந்தலும் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உள்ளது. தமிழக அரசும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை, தேமுதிக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றது. அன்னை மொழி காப்போம்; அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் கேப்டன் கொள்கை. தமிழ்நாட்டில் தமிழை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும். அதே போல அனைத்து மொழியையும் கற்க வேண்டும். மத்திய அரசு இதுவரை தொகுதி சீரமைப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தரவில்லை. 40 எம்பி தொகுதியை குறைப்பதாக ஒரு கருத்து உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தராதால் அது பற்றி நிறைய பேச ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் தொகுதிகளை குறைக்கும் படி மத்திய அரசு செயல்பட்டால், தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக கடும் எதிர்ப்பை தெரிவிக்கும். தொகுதி சீரமைப்பில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை தேமுதிக ஏற்காது என தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்ஜியசபா சீட் ஒதுக்கீடு செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.