பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள்: அண்ணாமலை!

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

ராணிப்பேட்டையில் பாஜக தலைவர் என்று மற்றொருவரின் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுகவினர்தான். பல்வேறு விஷயங்களில் எங்களை எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு செய்கின்றனர்.

ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்க மாட்டோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறுகிறார். 2026-ல் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவோம். பாஜகவின் செல்வாக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தெரியும். மும்மொழிக் கொள்கை தொடர்பான கையெழுத்து இயக்கத்துக்கு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். கையெழுத்து இயக்கம் சர்க்கஸ்போல இருப்பதாக கூறும் முதல்வர், துணை முதல்வர் உதயநிதி நீட்டுக்காக நடத்திய கையெழுத்து இயக்கம் பற்றி கூறட்டும்.

மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தின் உரிமையை மேகேதாட்டுவிலும் விட்டுக் கொடுக்கத் தயாராகி விட்டார் முதல்வர் ஸ்டாலின். சாராய ஆலைகள் மற்றும் டாஸ்மாக் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், அது எவ்வாறு தவறாகும்?

பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி; பா.ஜ.க. நோட்டா கட்சி; பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை ஒவ்வொரு பா.ஜ.க. தலைவர்களும், தொண்டர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். இன்று பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை எனும் சூழலை இரவு, பகலாக வேலை செய்து தொண்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். எந்த கட்சியையும், எந்த தலைவரையும் நான் சிறுமைப்படுத்தி பேசவில்லை. இன்று அந்த நிலைமையில் பா.ஜ.க. இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறோம். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறோம்.

எந்த கட்சியோடு கூட்டணி? தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும்? யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. எங்களுடைய நோக்கம் பா.ஜ.க. நிலைக்க வேண்டும். சரியான நேரத்தில் கூட்டணி குறித்து பேசுவோம். தேசிய தலைவர்கள் முடிவெடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.