மீண்டும் மணிப்பூரில் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

மணிப்பூரில் நீண்டகாலமாக இன கலவரம் நடந்து வந்த நிலையில் அம்மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் 22 மாதங்களுக்கு பின்பு பொது போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் தலைநகர் இம்பாலில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 25 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் மாநிலம் கடந்த இரு ஆண்டுகளாகவே போர் பூமி போல காட்சி அளிக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து நடந்த கலவரத்தில் துப்பாக்கிகளை கொண்டும் குண்டு வீசியும் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இந்த கலவரத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு வீடுகளும் தீக்கிரையானது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அமைதியை நிலைநாட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் பாஜக தலைமையிலான அரசு மீது எதிர்க் கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டதால் முதலமைச்சர் பதவியில் இருந்து பிரோன் சிங் விலகினார். தொடர்ந்து முதலமைச்சரை தேர்வு செய்ய இழுபறி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அமைதி திரும்பும் நோக்கில் 22 மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது . தலைநகர் இம்பாலில் இருந்து சேனாபதி மாவட்டத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், சாலையில் சென்ற பேருந்தை சிலர் இடைமறித்து அடித்து நொறுக்கினர். பேருந்தின் மீது கற்கள் வீசப்பட்டு கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். கலவரம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினருக்கும் கலவர காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் காங்க்போப்பி மாவட்டத்தில் குக்கி சமுதாயத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 25 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கெய்தெல்மான்பி பகுதியில் நடந்த மோதலில் 30 வயதான லால்கௌதாங் சிங்சிட் என்பவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். காம்கிபாய், மாட்பூங், கெய்தெல்மான்பி ஆகிய பகுதிகளில் நடந்த மோதல்களில் 25 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலம் முழுவதும் மக்கள் சுதந்திரமாக செல்லும் வகையில் போக்குவரத்திற்கு அனுமதி அளித்தது தான்மோதலுக்கு காரணம் என்றும், அதற்கு குக்கி சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டம் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. மோதல் கலவரமாக மாறிய நிலையில் போராட்டக்காரர்கள் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், இம்பால்- சேனாபதி பாதையில் செல்லும் அரசு பஸ்களை நிறுத்த முயன்றனர். மேலும், என்.எச்-2 இம்பால்-திமாபூர் தேசிய நெடுஞ்சாலை மீது டயர்கள் மீது நெருப்பு வைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குக்கி சோ குழு வெளியிட்டுள்ள வீடியோவில் தனி நிர்வாகம் ஏற்படுத்தும் வரை யாரையும் சுதந்தரமாக செல்ல அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.