மதுரையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மத நல்லிணக்க மாநாடு நடத்திய இந்து இயக்கத்தினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மதுரை எம்.பி. உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மத நல்லிணக்க மாநாட்டில் பேசியவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலி கொடுப்பதற்கு ஆதரவாக பேசியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து இயக்கங்களின் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளனர்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், நீதிபதிகளை அவமதிக்கும் வகையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் திருப்பரங்குன்றத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். மத நல்லிணக்க மாநாட்டில் சட்டம் – ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியவர்களை கண்டிக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மத நல்லிணக்க மாநாடு நடத்தி, அதில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசியது, தீர்மானம் நிறைவேற்றியது அனைத்தும் நீதிமன்ற அவமதிப்பாகும்.
எனவே, மதநல்லிணக்க மாநாடு என்ற பெயரில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மீண்டும் பதற்றத்தை உண்டாக்கும் வகையிலும், மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், இந்து அமைப்பினர்களுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையிலும், நீதிபதிகளையும் விமர்சனம் செய்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் மற்றும் மாநாட்டை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.