150 ரூபாய்க்காக மளிகை கடைக்காரரை போதை இளைஞர்கள் எரித்துக் கொன்றுள்ளனர். கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு இதுவே சான்று என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கேவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் 42 வயதான வேலு. திருமணம் ஆகாத இவர், அருகில் உள்ள பாரதி நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 7-ம் தேதி இரவு கடையை பூட்டி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த வேலுவை, சிலர் கல்லால் அடித்து, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளனர். தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேலுவிடம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த 26 வயதான சுதன் என்பவரும், அவரது நண்பரும் சேர்ந்து மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள், வேலுவை தாக்கி, அவரது பாக்கெட்டில் இருந்து 150 ரூபாயை பறித்துள்ளனர். அத்தோடு விடாமல் அவரது தலையில் தாக்கியுள்ளனர். பிறகு பெட்ரோல் ஊற்றி வைத்து எரித்துள்ளனர்.
சுதனை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்திருக்கிறது. இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகி இருக்கிறது. கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு, இந்த சம்பவமே சான்று. வெறும் 150 ரூபாய் பணத்திற்காக கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்குதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் தனியாக வெளியே செல்லவே அச்சப்படும் சூழல்தான் தமிழ்நாட்டில் இருக்கிறது.
டாஸ்மாக் மது கடைகளும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் தான் இதற்கெல்லாம் காரணம். மது போதையும், கஞ்சா போதையும் இளைஞர்களை எதையும் செய்ய தூண்டுகிறது. மது இல்லாத, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கினால் தான் மக்கள் நிம்மதியாக நடமாட முடியும். இது ஏதோ தமிழ்நாட்டின் தென்கோடியில் நடந்த ஒரு கொலை சம்பவமாக கருதி திமுக அரசு கடந்து விட முடியாது. இதில் உறுதியான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருட்கள் நடமாடத்தை முற்றிலும் கட்டுப்படுத்தாவிட்டால் தமிழ்நாடு முழுவதுமே இதுதான் நடக்கும். எனவே, காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, படிப்படியாக டாஸ்மாக் மதுக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.