கேப்டனுக்கு மனைவியாக இருந்ததைவிட.. அவருக்கு தாயாகதான் வாழ்ந்திருக்கிறேன்: பிரேமலதா!

கேப்டன் விஜயகாந்துக்கு நான் மனைவியாக இருந்ததைவிட அவருக்குத் தாயாகத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் மேடையிலேயே குரல் தழுதழுக்க கண்ணீர் மல்க பேசினார்.

திண்டுக்கல்லில் தே.மு.தி.க. பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

திண்டுக்கல் என்று சொன்னாலே தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கோட்டை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு திண்டுக்கல் மக்கள் அவர் மீது பாசம் வைத்திருந்தனர். நான் விஜயகாந்துடன் திண்டுக்கல்லுக்கு வரும்போதெல்லாம் மக்கள் வெள்ளம் தான் அவரை வரவேற்கும். அத்தனை பாசம் கொண்டவர்கள் திண்டுக்கல் மக்கள். நமது தலைவருக்கும் பிடித்த உணவு திண்டுக்கல் பிரியாணிதான். விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை. ‘என் மக்களே என் மக்களே’ என்று உங்களுக்காகவே உழைத்து, உங்களுக்காகவே வாழ்ந்து உங்களுக்காகவே மறைந்தவர் விஜயகாந்த். என்னுடைய பிறந்த நாள் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். எனக்கென்று எந்த விழாவும் இல்லை. என்றைக்கு விஜயகாந்த் மறைந்தாரோ, அன்றே என்னுடைய எல்லா விழாக்களும் முடிந்துவிட்டது. இனி நான் வாழும் வாழ்வு உங்களுக்காக தான். என் மக்களுக்காகத்தான்.

நமது தலைவர் விஜயகாந்த் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். அவர் நினைத்து இருந்தால் ஹிந்தி, தெலுங்கு என எத்தனையோ மொழி படங்களில் நடித்திருக்கலாம். ஆனால், சொல் ஒன்று செயல் ஒன்று என்று விஜயகாந்த் செயல்பட மாட்டார். தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என்று ஒரே உறுதியோடு தன்னுடைய காலம் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். விஜயகாந்துக்கு ஒரு வயது இருந்தபோதே அவருடைய தாயார் மறைந்துவிட்டார். தாய் பாசமில்லாமல் வளரந்தவர். நமது தலைவர் விஜயகாந்தை நான் திருமணம் செய்து 32 ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவருடைய மனைவியாக வாழ்ந்ததைவிட அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன். அவரை என் செல்லக்குட்டி என்று தான் அழைப்பேன்.

விஜயகாந்த் எப்படி கடுமையாக உழைப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மாதத்துக்கு இரண்டு படம் நடிப்பாரென்றால் எவ்வளவு உழைப்பை கொடுத்திருப்பார் என்று பாருங்கள். நமது தலைவரை தவற விட்டுவிட்டோமே என்று யாரும் வருந்தாதீர்கள். மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு வரும். அன்று நீங்கள் நமது தலைவரின் பிள்ளைகள் என்பதை உங்கள் ஒற்றை விரலால் நிரூபித்து காட்டுங்கள். பெயரளவுக்கு மட்டுமே திண்டுக்கல் மாநகராட்சியாக இருக்கிறது. எந்தவொரு அடிப்படை வசதியும் இங்கு இல்லை. சிறுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. யார் அந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் என்று சொல்லாமல் விவசாயத்துக்கு கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து இந்த சம்பவம் நடந்தது என்று கூறுகிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை போல் இருக்கிறது. சட்டம், ஒழுங்கை சீர்படுத்தி மக்களை காக்க வேண்டும். இந்த பொறுப்பு தமிழக அரசுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.