மணிப்பூர் ஜம்மு காஷ்மீர் வன்முறை: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பட்ஜெட்டில் மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் வன்முறை குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட அமர்வு இன்று மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடியும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இரு அவைகளும் மார்ச் 10 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இதில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், அந்த மாநிலத்தின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். திரிபுவன் ஷாகாரி பல்கலைக்கழக மசோதா 2025ஐ உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகளும் மக்களவையில் தாக்கல் செய்ய பட்டியலிடப்பட்டு உள்ளன. வாக்காளர் அடையாள அட்டை விவகாரம், டிரம்பின் வரி விதிப்பு பிரச்சனைகள், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மணிப்பூர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலவும் தொடர் கலவரம் பதற்றம் காரணமாக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. முக்கியத்துவம் கருதி நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை விவாதிக்க வேண்டும்.. அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 அமல்படுத்திய பிறகு 716 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதேபோல மணிப்பூரில் தொடரும் பதற்றம் காரணமாக 2 ஆண்டுகளில் 67,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தொடர்ந்து மௌனம் காக்கிறார்கள். அவர்கள் எப்போது வாய் திறப்பார்கள். இதற்கு இவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடே ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.