தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இரு மொழி கொள்கை மூலம் தமிழகம் நல்ல பலனைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியலில் மும்மொழி கொள்கை விவகாரம் மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளது. புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையும் ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அரசு ஏற்க மறுக்க இதுவே முக்கிய காரணமாக இருப்பதாக திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு சொல்வது சரியான போக்கு இல்லை என விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழ்நாடு என்ன ஆனாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவே ஏற்காது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் கூட இரு மொழிக் கொள்கையே அவர்களின் நிலைப்பாடு எனக் கூறியிருந்தார். இந்த விஷயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களும் கூட இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகவே உள்ளனர்.
இதற்கிடையே தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்காது எனக் கூறியுள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், எப்படி வட இந்தியர்கள் தமிழகம் வரும்போது தமிழ் கற்றுக்கொள்கிறார்களோ.. அதேபோல தமிழர்கள் வட இந்தியா செல்லும் போது இந்தி கற்றுக் கொள்வார்கள் எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை நாங்கள் செயல்படுத்தி சிறப்பான பலன்களைப் பெற்றுள்ளோம். தமிழ் நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கிறது. ஆங்கிலம் என்பது சர்வதேச வணிகம் மற்றும் அறிவியல் உலகத்துடன் இணைக்கிறது. நான் படித்த பள்ளியில் ஆங்கிலம் தான் பயிற்று மொழியாக இருந்தது. அதேநேரம் எனது தாய் மொழி தமிழ். ஆனால், இது எனக்கு எந்தவிதத்திலும் நஷ்டம் இல்லை. எனது மகளும் கூட இதேபோன்ற ஒரு பள்ளியில் தான் படித்தார்.. அவருக்கும் இதனால் எந்தவொரு சிக்கலும் இல்லை.
பல ஆயிரம் தொழிலாளர்கள் வட இந்தியாவில் இருந்து வேலைக்காகத் தமிழ்நாடு வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது. அவர்களுக்குத் தமிழ் இலக்கணம், இலக்கியம் எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு வாழ்க்கை நடத்தத் தமிழ் தேவை என்பதால் அதை கற்றுக் கொள்கிறார்கள். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் வட இந்தியாவுக்கு வேலைக்குச் செல்ல வேண்டி இருந்தால்.. வேலைக்காக இந்தி பேசும் மக்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டி இருந்தால் அப்போது அவர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள். எதையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.