மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய, கிழக்கு, வடக்கு, தெற்கு மாவட்டங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதுதொடர்பாகப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் கூறியதாவது:-
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பலர் கிட்டத்தட்ட பத்து வருட காலமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த மேட்டூர் அனல் மின் நிலையம் ஓடும் காலத்தில் இருந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக, பெண்கள் உட்பட 1100 பேர் அங்கு வேலை செய்து வருகிறார்கள். அதில் பெண்களும் அடங்கும். அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டி, அனல் மின் நிலையத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த தகவல் தமிழக வெற்றிக் கழகத்தினரின் தலைவர் தளபதியாரின்(விஜய்) கவனத்திற்குச் சென்றது. அதன்பின் நமது தலைவர்கள் பொதுச்செயலாளர் அவர்களிடம் நம் தொண்டர்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டம் என ஐந்து மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். அவரின் அறிவுறுத்தலின்பேரில், 10 நாட்களுக்கு முன்பு, மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பார்த்து ஆதரவு தெரிவித்து வந்தாம். ஆனால், பத்து நாட்கள் தாண்டியும் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையினையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
அந்த ஊழியர்களின் குடும்பத்தினரைப் போய் சந்திக்கும்போது, அவர்களது பிரச்னையை எப்படியாவது தமிழக அரசிடம் எடுத்துச் செல்ல தமிழக வெற்றிக் கழகம் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்கள். அதற்காக மார்ச் 5ஆம் தேதி போராட்டம் நடத்த, காவல் துறையிடம் அனுமதி கேட்டபோது அனுமதி தர மறுத்தனர்.
இங்கு ஆட்சிசெய்துவரும் திமுக அரசு, தேர்தல் அறிக்கை 153-ன் படி, பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒப்பந்தத் தொழிலாளர்களாக அரசின் எந்தத் துறையில் பணியாற்றினாலும் அவர்களுக்கு அரசு வேலை கொடுக்க பணி நியமனம் செய்வோம் என்று வாக்குறுதியை கொடுத்திருந்தது. ஆனால், இதுதொடர்பாக திமுக அரசு எந்தவொரு பணிநியமனத்தையும் இதுவரை செய்யவில்லை என்பதை பதிவுசெய்ய விரும்புகிறேன்.
எனவே, மேட்டூர் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக உறுதிசெய்ய அவர்களுக்கு ஒரு சிறப்புக்குழுவை அமைத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி பணிநிரந்தரம் செய்யவேண்டும் என சேலம் மாவட்டத்தின் 5 மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் எங்களது தலைவர் தளபதியின் அனுமதியை வாங்கி தமிழகம் முழுக்க போராட்டத்தை தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.