நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்பு ஆடை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக நேற்று (மார்ச் 10) பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி தொடங்கியது. அப்போது,தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக வேண்டுமென்றே அரசியல் செய்வதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்தார். ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ என்று அவர் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, தனது பேச்சை திரும்ப பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது, ‘‘எங்கள் கவுரவத்தை அமைச்சர் இழிவுபடுத்தி உள்ளார். நாங்கள் அநாகரிகமானவர்கள் என்று விமர்சித்துள்ளார். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸும் வழங்கினார்.

இதையடுத்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘‘தமிழக அரசை, தமிழக எம்.பி.க்களை, தமிழக மக்களை அநாகரிகமானவர்கள் என்று நான் கூறியதாக கனிமொழி குற்றம்சாட்டுகிறார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதன்பிறகும், தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர். அப்போது, திமுக எம்.பி. தயாநிதி மாறன், அவை மாண்பை மீறியதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா குற்றம்சாட்டினார். திமுக எம்.பி.க்களின் தொடர் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று (மார்ச் 11) கருப்பு ஆடை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என்பதை உணர்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி உள்ளிட்டோர், மதிமுக எம்.பி. வைகோ, விசிக எம்.பி. திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, “தர்மேந்திர பிரதான் தனது கருத்துக்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய மொழி எதிர்பாராதது. இதுபோன்ற மொழியைப் பயன்படுத்தியதன் மூலம் ஒரு மத்திய அமைச்சர், மாநில மக்களை அவமதித்துள்ளார். ஒன்று அவர் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். திரிணமூல் காங்கிரஸ், திமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் ஆதரவாக நிற்கிறது” என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “இரு மொழி பாடத்திட்டம் எங்களுக்கு மிகச் சிறப்பானதாக உள்ளது. இதில், தமிழ்நாடு தெளிவாக உள்ளது. எங்கள் மொழி அடையாளத்தைப் பாதுகாக்கிறது. மேலும், வணிகம் மற்றும் அறிவியல் உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் எங்களுக்கு இணைப்பு மொழியாக உள்ளது. மூன்றாவது கட்டாய மொழி எங்களுக்குத் தேவையில்லை. தர்மேந்திர பிரதான் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். என்றாலும், அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. நாங்கள் மும்மொழிக் கொள்கையிலும், புதிய கல்விக் கொள்கையிலும் கையெழுத்திட வேண்டும் என்று கூறுகிறது. அவர்கள் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். தமிழகக் குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமை இல்லை. நேற்று, அவர் (தர்மேந்திர பிரதான்) மிகவும் மோசமான முறையில் பதிலளித்தார், நாங்கள் நேர்மையற்றவர்கள் என்றும், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் கூறினார். அவர் இவ்வாறு பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.