கோவையில் வனத்துறை தேர்வில் ஆள்மாறாட்டம்: வட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது!

வனத் துறையில் டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக வடமாநிலங்களைச் சேர்ந்த 8 பேரை கோவை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு வனத் துறையினருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் 8, 9 – ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா, மத்தியபிர தேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று கோவையில் நேர்முக தேர்விவு நடந்தது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர். அப்போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகை சரிபார்க்கப்பட்டது. அதில் எழுத்து தேர்வு நடந்த போது சேகரித்த கைரேகைக்கும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைக்கும் வேறுபாடு இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறு நபர்களை வைத்து தேர்வு எழுத வைத்தது தெரியவந்தது. இது குறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரிஷிருமார் (வயது 26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திரகுமார் (24), ராஜஸ்தானைச் சேர்ந்த லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா (26), அரியானாவைச் சேர்ந்த சுப்ராம்(26), பீகாரைச் சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவியது யார் , வேறு யாரேனும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு வந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.