தஞ்சாவூரில் சசிகலா – வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சசிகலா – வைத்திலிங்கம் சந்திப்பு பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி நிற்கும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒற்றை அதிகாரம் கொண்ட நபராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலா கொடுத்த பதவியை மறந்துவிட்டு சர்வாதிகார போக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையில் வழக்குகளால் இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வந்துவிடுமோ? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்த சூழலில் தான் தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாடு பகுதியில் உள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ ஆர்.வைத்திலிங்கம் வீட்டிற்கு டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து சென்றுள்ளனர். முதலில் சுமார் 30 நிமிடங்கள் வைத்திலிங்கம் – டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், உடல்நலன் குறித்து விசாரிக்க சென்றேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் மிகவும் பலவீனப்பட்டு கிடக்கிறது. இது அக்கட்சியினருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கு நன்றாக தெரிகிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்து கொள்ளாவிட்டால் ஜெயலலிதாவின் அதிமுகவிற்கு மூடுவிழா நடத்த வேண்டியது தான் என்றார்.

பின்னர் சசிகலா நேரில் வந்து வைத்திலிங்கத்தை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வைத்திலிங்கத்துடன் அரசியல் குறித்தும் பேசினோம். வரும் 2026ல் நல்லாட்சி வழங்க அதிமுக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எங்கள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மக்களின் ஆட்சி என்று எப்போதும் கூறுவார். அந்த வகையில் தான் அதிமுகவும் தொடங்கப்பட்டது. இவரது வழியில் தான் ஜெயலலிதாவும் செயல்பட்டார். இதனை நாங்களும் பின்பற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று திரை மறைவில் காய் நகர்த்தப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சந்தித்து பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.