பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்: வானதி சீனிவாசன்!

“பள்ளிக் கல்வித் துறையில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அத்திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே வழங்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். ஆனால், புதிய கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே, கல்வித்துறையில், தமிழகத்துக்கான நிதியை வழங்க முடியும் என்று மத்திய அரசு ‘பிளாக்மெயில்’ செய்கிறது, மிரட்டுகிறது என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள், ஆசிரியர்களின் திறன், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்தவும் அதற்கான தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழகத்துக்கு 2018 -19 முதல் 2023-24 வரை ரூ. 10,447 கோடியே 30 லட்சத்தை மோடி அரசு வழங்கியுள்ளது.

எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ. என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, புதிய தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, பல்வேறு கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி அவற்றை, முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதாக ஒப்புக்கொண்டு, கையெழுத்திட தயாரான திமுக அரசு, கடைசி நேரத்தில், யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு கையெழுத்திட மறுத்து விட்டது. அதனால்தான், அத்திட்டத்துக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தான் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அரசியலாக்கி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித் துறையில் பி.எம். போஷன் திட்டத்தின்கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க, மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. 2024-25-ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட ரூ. 443 கோடியில், இதுவரை ரூ. 339 கோடியே 87 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. பள்ளி படிப்பை தவறவிட்ட, வயது வந்தோர்களுக்கு கல்வி அளிக்கும் ‘உல்லாஸ்’ என்ற புதிய பாரத கல்வியறிவு திட்டத்துக்காக, 2022-23 முதல் 2024-25 வரை ரூ. 13 கோடியே 77 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கு திட்டத்துக்கும், அதில் பணியாற்றும் சமையலர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்கவும் மத்திய அரசு தொடர்ந்து நிதி வழங்கி வருகிறது. பி.எம். ஸ்ரீ திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கான நிதி விடுவிக்கப்படாததற்கு, திமுக அரசு முதலில் ஒப்புக்கொண்டு, கடைசி நேரத்தில் பின்வாங்கியதே காரணம்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளைத்தான், பி.எம். ஸ்ரீ திட்டத்தின் கீழ், சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப் போகிறோம். எனவே, கல்வித் துறையில் மாணவர்கள் நலனில் அரசியல் நடத்துவதை விட்டுவிட்டு பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.