மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது நியாயமா? எனக் கேட்ட அவர், தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. எல்லா வகைகளிலும் மத்திய அரசு தமிழகத்திற்கு தடைக் கற்களை போட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை யாருக்கும் விட்டுத் தர மாட்டோம். தமிழகம் சிறுமைப்படுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். திமுகவின் உண்மையான குணத்தை காட்ட வேண்டிய நேரம் இது. அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசுதான். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. 2000 கோடி அல்ல 10,000 கோடி கொடுத்தாலும் தமிழக அரசு முன்மொழிக் கொள்கையை ஏற்காது என்பதால் மத்திய அமைச்சருக்கு எரிச்சல். இதன் காரணமாகவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கின்றனர். இது நியாயமா? தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா? உயிரே போனாலும் பாஜகவின் பாசிசத்துக்கு அடி பணிய மாட்டோம்.
உரிமை குரல் எழுப்பினால் நாகரீகம் அற்றவர்கள் என்கிறார்கள். உலகிற்கே நாகரிகத்தைச் சொல்லிக் கொடுத்தது. தமிழகம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை இந்த உலகிற்கு சொன்னது தமிழ்நாடு. எத்தனை கோடி செலவிட்டாலும் சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாது. மத்திய அரசு கொண்டுவந்துள்ளது கல்விக் கொள்கை அல்ல.. காவி கொள்கை.. அதுவும் இந்தியாவை வளர்க்கும் கல்விக் கொள்கைக்கு பதிலாக இந்தியை வளர்க்கும் காவி கொள்கைக்கு மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளர்க்க பாருங்கள் பிரதமர் மோடி அவர்களே..
உரிமைகளைக் கேட்டால் தொகுதிகளை குறைப்போம் என்கிறார்கள். தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு 8 தொகுதிகள் பறி போகும். இது உரிமை சார்ந்த பிரச்சனை. கேள்வி எழுப்பினால் தொகுதிகளை குறைப்போம் என்று எதேச்சாதிகாரத்தை பாஜக அரசு கொண்டு வருகிறது. பாஜகவின் பாசிச நடவடிக்கைக்கு எதிராக அணி திரட்டி வெற்றி பெறுவோம். அணி திரண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழ்நாடு போராடும். மணிப்பூர் பற்றி எரிகிறது அதனை கட்டுப்படுத்த ஒரு துரும்பை கூட மத்திய அரசு கிள்ளி போடவில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் சமஸ்கிருதத்தை வளர்ப்போம் என்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன் தமிழகத்தில் இந்தியை எந்த காலத்திலும் திணிக்க முடியாது. முந்தைய ஆட்சியில் தமிழக உரிமைகள் டெல்லியில் அடகு வைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். நமது திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. எனவே எந்த காலத்திலும் பாஜகவின் பாசிச அணுகுமுறைக்கு திமுகவும் தமிழ்நாடு அடிபணியாது. இவ்வாறு அவர் பேசினார்.