அமைச்சர் பிடிஆர் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா?: அண்ணாமலை!

“தமிழகத்தில் உள்ள எல்லா அமைச்சர்களின் பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவரை ஏராளமான பாஜகவினர் வரவேற்றனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 10 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. கிராமங்களில் கட்சியினர் மக்களை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். மே மாதம் முடியும்போது ஒரு கோடி கையெழுத்து என்கின்ற இலக்கை எட்டுவோம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மூன்று மொழி படிக்கக்கூடிய மாணவர்கள் மொத்தமே ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தான் உள்ளனர் என்று கூறுகிறார். 1635 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. 15 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர். 30 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 479 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. தமிழ் மொழியும் வேறு மொழிகளும் படிக்கிறார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிற 479 பள்ளிகள் உள்ளன. தோராயமாக 14 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். திமுகவிற்கு தேர்தல் நிதி மதுபான ஊழலில் தான் வருகிறது. டாஸ்மாக் நிறுவனம் மதுபான கொள்ளையை இவர்கள் தான் வடிவமைக்கிறார்கள். தமிழகத்தில் பெண்களின் தாலியை எடுத்து ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள் என்பதுதான் இன்றைய நிலை. மதுபான ஊழல் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக திமுக அதிகமாக நாடகமாடி வருகிறது.

தமிழகத்தில் பள்ளி கல்வித் துறை திவாலாகி உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர ஆங்கில மொழி படிக்க கூடியவர்கள் அதிகமாக உள்ளனர். 27 சதவீத பேர் ஆங்கிலத்தை எடுத்து படிக்கின்றனர். தமிழகத்தில் கற்றல் அறிவு குறைந்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் இப்படித்தான் படிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு கனிமொழி யார்? கனிமொழி மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவர்களுக்கு ஒரு நியாயமா? காங்கிரஸ் சட்டப்பிரிவு 386 பயன்படுத்தி ஆட்சியிலிருந்து உங்களை நீக்கியது. அதுதான் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மும்மொழிக் கொள்கை கொண்டு வருவதை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்றார்.

மும்மொழிக் கொள்கையை அறிவு உடையவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் எங்கு படிக்கிறார்? ஒரு அமைச்சர் மும்மொழிக் கொள்கையை ஏற்பவர்களை அறிவுள்ளவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்காக நான் அவரிடம் திரும்பக் கேட்க விரும்புகிறேன். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா? என்பதற்கு பதில் சொல்லி விட்டு பேசுங்கள். உங்கள் மகன் எந்தப் பள்ளியில் படிக்கிறார்? உங்களது மகன் மூன்று மொழி சொல்லி கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால் உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த எம்.பி, எம்.எல்.ஏக்களின் குழந்தைகள் இரு மொழி கொள்கைப்படி படிக்கிறார்கள்? தமிழகத்தில் எல்லா அமைச்சர்களின் மகன், பேரக் குழந்தைகள் எல்லோரும் மும்மொழி தான் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயம். அரசு பள்ளியில் படிக்கக்கூடிய 52 லட்சம் குழந்தைகளுக்கும் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கும் சமமான கல்வி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.