இதுதான் திராவிட மாடலின் நாகரீகமா?: நிர்மலா சீதாராமன் கேள்வி!

தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டது முதல் போதைப் பொருள் கடத்தல் வரை பல்வேறு சம்பவங்களை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பட்டியலிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதான் திராவிட மாடலின் நாகரீகமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று பேசிய திமுக எம்பி ராணி ஶ்ரீகுமார், 4,000 ஆண்டுகால நாகரீகப் பெருமிதம் கொண்ட தமிழருக்கு நாகரீகம் பற்றி யாரும் பாடம் எடுக்க தேவை இல்லை என காட்டமாக கூறினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் பதிலளித்து பேசியதாவது:-

நாம் நாகரீகம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். 4,000 ஆண்டுகளுகும் மேலாக நாகரீக மக்களாக வாழும் எங்களுக்கு நாகரீகம் பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்கிறார்கள். தமிழர்கள் நாகரீகம் குறித்தும் மணிப்பூர் பற்றியும் நிர்பயா நிதி பற்றியும் இங்கே பேசிய உறுப்பினர் (திமுக ராணி ஶ்ரீகுமார்) தெரிவித்தார். மேலும் திராவிட மாடல் அரசு பற்றியும் பெண்களுக்கு இலவச பேருந்து பயண அனுமதி பற்றியும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார். 4,000 வருஷம்.. நாகரீகம்.. பண்பாடு, கலாசாரம்.. எங்களுடையது.. எங்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியது இல்லை என்ற அர்த்தத்தில் உறுப்பினர் பேசினார்.

4,000 ஆண்டுகள் நாகரீகம் இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் இவங்களைச் சேர்ந்தவங்க (திமுக), மார்ச் 1989-ல் சட்டசபையில் நாகரீகம், பெண் உரிமை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் பற்றி சொன்னவர்கள், ஜெயலலிதா அம்மையார் அவர்களுடைய புடவையை பிடித்து இழுத்தவங்க இவங்கதான்.. (திமுக).. எப்படி சொல்லலாம் என சப்தம் போடலாம் அவங்க.. ஆனால் அதுதான் உண்மை. பெண்ணின் புடவையை பிடித்து இழுத்ததுதான் நாகரீகமா? 4,000 ஆண்டுகால நாகரீகம்தான்.. நாம் அனைவரும் பெருமிதப்படுகிறோம்.. எங்களுக்கு நாகரீகம் பற்றி கற்றுத் தர வேண்டாம் என்று சொல்லுகிற உறுப்பினர்களே 1989-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக சட்டசபையில் நடந்ததுதான் நாகரீகமான செயலா?சட்டசபையில் ஒரு பெண்ணின் புடவையை அவங்களில் ஒருவர் (திமுக) பிடித்து இழுத்தது.. நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை என்பதுதான் நாகரீகமா என கேட்கிறேன். இதுதான் நாகரீகமா? பண்பாடு? கலாசாரம்?

பெண்களுக்கு இலவச பேருந்து பயண அனுமதி தந்தால் மட்டும் போதாது.. பெண்களை அவமதிக்காமல் இருக்க வேண்டும். அதை நீங்க செய்யலை (திமுக). அதே மாதிரி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 2024 டிசம்பரில் கொடூரமான பலாத்காரம் நடந்திருக்கு.. அவளும் ஒரு பெண்.. அதுவும் நாகரீகத்துக்கு எதிர் மறையாக இருக்கக் கூடிய விஷயம்தான். இதுல நீங்க யாருக்கு உபதேசம் செய்யாதீன்னு சொல்றீங்க? திருச்சியில் 9 வயது பள்ளி குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரே என்ன நடவடிக்கை எடுத்தீங்க? நீங்க கலாசாரம், பண்பாடு பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்கிறீர்கள்? இதுதான் திராவிட மாடலா?

தஞ்சாவூர் அருகே 22 வயது இளம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். திராவிட மாடல் திமுக அரசில் இப்படியெல்லாம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இத்தனைக்கும் மேலாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் 68 பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தனர்; ஆனால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜாதி ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் 28 ஜாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன; சமத்துவம் பேசுகிற திராவிட மாடல் ஆட்சியில் வெவ்வேறு ஜாதிகளில் திருமணம் செய்து கொண்டால் பொதுமக்கள் மத்தியிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்படுகின்றனர். இதுதான் திராவிட மாடல்?

தமிழ்நாட்டில் போதை சார் வன்முறைகள் அதிகரித்துள்ளன; எங்கள் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகிவிட்டதாக பெற்றோர்கள் கதறி அழுகின்றனர்; போதைப் பொருள் வாங்க பணம் தர மறுத்த அம்மாக்களை கொலை செய்து இருக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்- அவர் மிக முக்கியமான குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். இது பற்றி திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.