மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே?: விஜய்!

“தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதியமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே?” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதி அமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே? முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரை தமிழகம் இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மத்திய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே, இது போதாதா அவரைத் தமிழகம் ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு? பெரியார் போற்றுதும், பெரியார் சிந்தனை போற்றுதும்! இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

அநாகரிமாக போாட்டம் நடத்துகிறீர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்காக திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறீர்கள். தர்மேந்திர பிரதான் கூறியதை திரும்ப பெற வைத்தார்கள். அவர்களிடம் பணிவுடன் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

ஒரு பிரபல மூத்த தலைவர் தமிழ் பற்றி கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவருடைய பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அவர் கூறியதை வாசிக்கிறேன். அவர் யார் என தமிழ் மொழியை அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் கூறியது கடந்த 1943-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி வெளியான ‘விடுதலை’ இதழில் வெளியிடப்பட்டது.

‘தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்’ என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கற்ற ஒரு அனுபவ புலவர் கூறினார். தமிழை பற்றி எவ்வளவு இழிவாக அவர் கூறினார் என்பதற்கு இந்த ஒரு வரி போதும். ஆனால், அவரது போட்டோவை திமுக எம்.பி.க்கள் தங்கள் அறையில் வைத்து வழிபடுகிறீர்கள். ஆனால், அநாகரிகமாக போராட்டம் நடத்துகிறீர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்காக அவரை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறீர்கள்.

அதே மூத்த தலைவர், ‘துக்ளக்’ பொன்விழா ஆண்டு இதழில், ‘இந்த தமிழ் மொழியானது, காட்டுமிராண்டி மொழி என நான் ஏன் கூறுகிறேன் என்று இன்று கோபித்துகொள்ளும் யோக்கியர்கள் யாரும் சிந்தித்து பேசுவதில்லை. வாய் இருக்கிறது என்று எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்பதை தவிர அறிவையோ, மானத்தையா, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிபட்ட இவர்கள் போக்கு படியே சிந்தித்தாலும், தமிழ் மொழி 3000-லிருந்து 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதை, தமிழன் பெருமைக்கு ஒரு சாதனமாய் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதையேதான் முக்கிய காரணமாக சொல்கிறேன். அன்றிருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாக இருக்கட்டும், அகஸ்தியனாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும். இவர்களை பற்றி தெரிந்துகொள்ள உனக்கு புத்தியில்லாவிட்டால், இத்தமிழை பற்றி பேச நீ தகுதி உடையவனா? இவர்களை பற்றியும், இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் பற்றியும் நீங்கள் படிக்காமல் தமிழ் பழமையான என மொழி என கூறுகிறார்கள்’ என்றார் அவர்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி என மீண்டும் மீண்டும் கூறியவரை இவர்கள் வழிபடுகிறார்கள்? அவரைத்தான் திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கிறார்கள். இவர்களின் கபட நாடகத்தை பாருங்கள். தமிழை நேசிப்பவர்கள் என கூறுபவர்கள், தமிழ் காட்டுமிராண்டி மொழி என கூறியவரை எப்படி வழிபடுகின்றனர்?

அதே நபர், ‘தமிழ் அறிஞர்களை ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். சமூக முன்னேற்றத்துக்கு இவர்கள் எதுவும் செய்யாததால் அவர்களை தூக்கிலிட வேண்டும். தமிழை நேசித்தவர்களுக்கு இவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை’ என்று கூறினார். இது கடந்த 1967-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வெளியான ‘விடுதலை’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய தலைவரை வழிபடுவதுதான் திாவிட மாடல்.

மேலும், அவர் கடந்த 1967-ம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்றவர்களை முட்டாள்கள் என கூறினார். இதெல்லாம் அவரின் பொன்னான வார்த்தைகள். தமிழை கற்பது எதற்கும் உதவாது, பிச்சை எடுக்க கூட உதவாது என கூறினார். இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிக்காமல், தமிழை நேசிப்பாதாக கூறும் இவர்கள், இந்தியை திணிப்பதாக கூறுகிறார்கள்.

தமிழை கற்க வேண்டும் என்றுதான் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால், இவர்கள் இந்தியை திணிப்பதாக கற்பனை செய்து கொண்டு, தமிழ்நாட்டில் தவறாக அரசியல் குழப்பதை ஏற்படுத்தி, தமிழக குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை மறுக்கிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி என கூறியவரை வழிபடுகிறார்கள். இதையெல்லாம் நான் நாடளுமன்றத்தில் எடுத்து சொல்வேன் என்ற பயம் காரணமாக, தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை விட்டு ஓடிவிட்டனர். ஆனால், இவர்கள் இதை டி.வி.யில் பார்ப்பார்கள் என எனக்கு தெரியும். தமிழ்நாட்டு மக்களும் இதை டி.வி.யில் பார்ப்பார்கள். இவர்களின் நடிப்பை எடுத்துரைக்க வேண்டும். பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் என நான் தமிழக மக்களுக்கு கூற விரும்புகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.