மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்காமல் இரு மொழிக் கொள்கையை மட்டுமே கடைபிடித்து வருவதால் வட இந்திய மாநிலங்களைவிட 40 ஆண்டுகள் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது என்று மதிமுக முதன்மைச் செயலாளராக துரை வைகோ எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது கட்டாய இந்தி மொழி திணிப்பு முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது என்பது தமிழ்நாட்டின் எதிர்ப்பு. ஆனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்க முடியும்; மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததால் தமிழ்நாடு 40 ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்ற்று கையெழுத்திட வந்தது; ஆனால் சூப்பர் முதல்வரால் தடுக்கப்பட்டது; தமிழ்நாட்டு எம்பிக்களுடன் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தம்மை சந்தித்த போது புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக தெரிவித்தார்; இப்போது தமிழக எம்பிக்கள், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; தமிழக எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் எனவும் விமர்சித்திர்ந்தார்.
இந்த விமர்சனத்துக்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் தர்மேந்திர பிரதான் தமது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இந்த விவகாரம் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த போது தமிழக எம்பிக்களுடன் நானும் சென்றிருந்தேன். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வாருங்கள், அதை ஏற்றுக் கொள்வது குறித்து பரிசீலிப்போம் என்றார். ஆனால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் 40 ஆண்டுகள் பின் தங்கி உள்ளது; தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர முடியாது என திட்டவட்டமாக மறுத்தார்.
அப்போது நான் குறுக்கிட்டு, மும்மொழியை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாடு 40 ஆண்டுகள் பின் தங்கவில்லை; தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட இரு மொழிக் கொள்கையை நாங்கள் பின்பற்றுவதால் வடமாநிலங்களை விட 40 ஆண்டுகள் முன்னேறி இருக்கிறோம்; தென்னிந்திய மாநில மக்களைப் பொறுத்தவரை ஆங்கிலம் என்பது முன்னேற்றத்துக்கான மொழியாக கருதுகிறோம்; தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்று உலகம் முழுவது பல துறைகளில் முதன்மையாகவும் ஆளுமை செலுத்தக்கூடியவர்களாகவும் இருப்பதற்கு அவர்களின் ஆங்கிலப் புலமையே காரணம். அதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்பதே காரணம் என பதிலளித்தேன்.
அத்துடன் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழி தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஏன்? அது ஏன் வெளிநாட்டு மொழியாக இருக்கக் கூடாது? உலகமயமாக்களினால் பல்வேறு நாட்டு மக்களோடு தொடர்பு கொள்வதற்கும், வர்த்தகம் சம்பந்தமாக வெளிநாடு செல்வதற்கும் உலக மொழி அவசியம். ஆனால் மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழி தான் இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டு மாணவர்கள் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளை தேர்ந்தெடுக்க போவதில்லை. அப்பொழுது அவர்களுக்கு இந்தி மட்டும்தான் ஒரே வாய்ப்பாக இருக்கும். இதைத்தான் நாங்கள் மறைமுக இந்தி திணிப்பு என்கிறோம். எனவே மறைமுக இந்தி திணிப்பை கொண்டு எங்களை நீங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் அவ்வளவுதான் எனவும் தர்மேந்திர பிரதானிடம் தெரிவித்தேன். தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபா என்பது 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறோம் எனவும் பதிலளித்தேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.