தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் சாதிய பாடலுக்கு நடனமாடிய சம்பவம் அடங்குவதற்குள், ஸ்ரீவைகுண்ட தலித் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களிடையே சாதிய மோதல்களை தவிர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரராஜ். 17 வயதாகும் இவர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் ஆங்கிலப் பாடத் தேர்வு எழுதுவதற்காக பேருந்தில் சென்ற போது, கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்தை மறித்த சிலர், தேவேந்திரராஜை வெளியே இழுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு சாதிய வன்மமே காரணம் என்று கூறப்படுகிறது. கபடி போட்டியின் போது தேவேந்திர ராஜ் தலைமையிலான கபடி குழு வென்றதால், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கிருஷ்ணகிரியில் பாமக துண்டு அணிந்து சாதிய பாடலுக்கு நடனமாடிய சம்பவம் நிகழ்ந்தது. அதேபோல் கடந்த ஆண்டு நெல்லையில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி மாணவர்கள் மத்தியில் சாதிய வன்மம் அதிகரித்து வருவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே மாணவர்கள் இடையே சாதிய வன்முறை மற்றும் எண்ணங்கள் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. அதில், பள்ளிப் பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத தலைப்புகளை சேர்ப்பது உள்ளிட்ட பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை கொண்ட சமூகநீதி கண்காணிப்பு குழுவை நியமிக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் வகுப்பறையிலும் மாணவர்களின் இருக்கை அகரவரிசைப்படி இருக்க வேண்டும். பள்ளிகளின் பெயர்களில் கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் நலன் போன்ற பெயர்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்தையும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டு வரும் முடிவை அமல்படுத்த வேண்டும்.
புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர் இடம்பெறாதவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்ற செய்ய வேண்டும். அதேபோல் முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் போன்ற பொறுப்புகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர்களை பணியமர்த்தக் கூடாது. பள்ளிகளில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு அறநெறி கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால், அவரை அரசு செலவில் போதை ஒழிப்பு மையத்தில் சேர்த்து அவரின் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர் மனசு உள்ளிட்ட புகார் பெட்டிகளை கண்காணிக்க வேண்டும். அனைத்து சமூகங்களை சார்ந்த மாணவர்களை கொண்ட சமூக நீதி மன்றத்தை அமைக்க வேண்டும்.
அதேபோல் மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதி தொடர்பான விவரங்கள் இருக்க கூடாது. எந்த சூழலிலும் மாணவர்களை ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதியை குறிப்பிட்டு கருத்துகளை கூறக் கூடாது. மாணவர்களின் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள், நெற்றியில் திலகம் இடுவதை தடை செய்ய வேண்டும். சாதியை குறித்தும் வகையில் வண்ணம் பூசப்பட்ட சைக்கிள்களில் வருவதையும், சாதிய உணர்வு வெளிப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று ஏராளமான பரிந்துரைகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகள் வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இந்த அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறிக்கை சமர்ப்பித்து 9 மாதங்கள் கடந்த பின்னரும் கூட, இதுவரை அந்த அறிக்கை ஏற்கப்பட்டுள்ளதா அல்லது சில பரிந்துரைகளை மட்டும் ஏற்கிறதா என்பது கூட தெரிவிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்த அறிக்கையை தமிழக அரசு முழுமையாக படித்ததா என்பது கூட தெரியவில்லை. அதேபோல் அந்த அறிக்கைக்கு அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், பரிந்துரைகளை செயல்படுத்த சில அரசியல் சிக்கல்களும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த குழு அறித்த அறிக்கை மட்டுமல்லாமல் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து அளித்த பரிந்துரைகள், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கைககள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.