கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் பணி அல்ல: உயர்நீதிமன்றம்!

பொது இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் பணி அல்ல என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை நடத்த கட்சியினர் போலீசிடம் அனுமதி என்பது பெற வேண்டும். மேலும் பொதுவெளியில் நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு என்பது வழங்கப்படும். கட்சி நிர்வாகிகள் இடையேயான மோதலை தடுக்கவும், வெளிநபர்களால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் நிகழ்ச்சி முழுவதும் பாதுகாப்பு வழங்குவார்கள்.

இந்நிலையில் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்டம் மார்ச் 14ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்ட இடத்தில் உள்ள கந்தசாமி கோவிலில் அன்றைய தினம் பிரேமாற்சவ விழா நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் அது முகூர்த்த தினமாகவும் உள்ளது. இதனால் போலீசார் நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கையை ஏற்கவில்லை.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், ‛‛கந்தசாமி கோவில் பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் அனுமதி கொடுக்கவில்லை” என்று கூறப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛இந்த நிகழ்ச்சிக்கு யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாது. மொத்தம் 400 முதல் 500 பேர் மட்டுமே வருவார்கள். அசம்பாவிதம் நடக்காது” என்று கூறினார்.

இதனை கேட்ட உயர்நீதிமன்றம், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். மேலும் பொது இடங்களில் நடக்கும் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்புக்கு காவல்துறைக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம், ‛‛பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தான் காவல்துறை உள்ளது. தினந்தோறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் பணியில்லை. பொதுமக்கள் வழங்கும் வரிப்பணத்தில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் பணத்தை வீணடிக்க கூடாது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நாம் தமிழர் கட்சியினர் தான் பொறுப்பேற்க வேண்டும். இப்போது ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டாம். ஆனால் இனி வரும் கட்சி பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு வழங்க காவல்துறை கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டண தொகையை நிகழ்ச்சி நடத்தும் கட்சியினரிடம் வசூலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.