“2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமூகத்தின் பல தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ள போதிலும், தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு தொடர்கிறது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்தி, பரவலாக்குவதில் நிதி நிலை அறிக்கை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி வசதிக்காக 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் தொன்மை மரபையும், இணையற்ற நாகரிக வாழ்வையும் எடுத்துக் கூறும் தொல்லியல் ஆய்வுகளுக்கும், அருங்காட்சியகங்கள் அமைக்கவும் முன்னுரிமை வழங்கியுள்ளது. பிறநாட்டு நல்லறிஞர்கள் “தெள்ளுற்ற தமிழமுதின் சுவை” ருசிக்க தலைசிறந்த தமிழ் நூல்கள் பிறநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் திறமையான புலமைக்கு வெளிநாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்ற மகாகவியின் கனவு நனவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. பெண் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டம் பெண்களை அதிகாரப்படுத்தும் திசையில் புதிய கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் தேர்வு செய்வது, அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தி மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் போன்றவைகளில் கவனம் செலுத்தியுள்ளது. அதிக அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டதில் நிதிநிலை அறிக்கை பெருமிதம் கொள்கிறது. கொரோனா காலத்தில் இருந்த நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு பணப் பலன் திட்டத்தை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் பெறலாம் என அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு களத்தில் நுழைந்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதும், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து, தனது கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் நிலையிலும் இரு மொழிக் கொள்கையில் உறுதி காட்டி வருவதும், வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பதும் பாராட்டி வரவேற்கதக்கது.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை, தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில், ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. தனி நபர் வருமானம் உயர்ந்து வரும் தமிழ்நாட்டில் சொற்பத்தொகை தொகுப்பூதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவதை நிதி நிலை அறிக்கை காணத் தவறியது வருத்தம் அளிக்கிறது.
நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு தொழிலாளர் ஊதியப் பாக்கி உட்பட ரூ.3 ஆயிரத்து 896 கோடி நிதி வழங்க மறுத்து வருவதை கடுமையான குரலில் கண்டித்திருக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் மின் கட்டணத்தில் சலுகை கோரி வருவதையும், நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதையும் நிதி நிலை அறிக்கை கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமூகத்தின் பல தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ள போதிலும், தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு தொடர்கிறது என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.