“திமுக கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அளித்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் வகையில் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. கடந்த 4 முறை வேளாண் பட்ஜெட் போலவே நடப்பு ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதால் வேளாண் வளர்ச்சிக்கு பயன் தராது” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் அமையவில்லை. கடந்த 4 வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த உணவு உற்பத்தியை அதிகரித்தல், மானிய விலையில் வேளாண் இயந்திரம் வழங்குதல், உழவுத் தொழிலுக்கு மின் இணைப்புகள் வழங்குதல், சாகுபடி பரப்பை அதிகரித்தல், உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல், விவசாயக் கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால் என்ன பயன் என்று விவசாயிகளிடம் கேட்டால், அதற்கு விவசாயத் தொழில் முன்னேறவில்லை, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, விவசாயம் சார்ந்த தொழில்களும், தொழிலாளர்களும் வளர்ச்சி அடையவில்லை என தெரிவிக்கின்றனர்.
இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள 5-வது வேளாண் பட்ஜெட்டில் கரும்பு டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.349, பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.891 கோடி, நெல் விவசாயிகளுக்கு ரூ. 1,452 கோடி, வேளாண் இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் கடந்த காலம் போல நன்மை பயக்காது.
குறிப்பாக, திமுக கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அளித்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் வகையில் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. கடந்த 4 முறை வேளாண் பட்ஜெட் போலவே நடப்பு ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதால் வேளாண் வளர்ச்சிக்கு பயன் தராது.
எனவே, தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டானது விவசாயத் தொழிலை மேம்படுத்தியதாக விளம்பரப்படுத்தி, தமிழக அரசை புகழ்ந்து, விவசாயிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.