‛‛நான் இக்கட்டான சூழலில் இருக்கிறேன். ஆனால் பல வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அந்த கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சென்னை ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா 6ம் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இந்த விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது:-
நான் இக்கட்டான சூழலில் இங்கு நின்று கொண்டிருப்பதை உங்களால் உணர முடியும். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் பேசியது போல் நான் பேச முடியாது. அவர் ஒரு கட்சியின் தலைவர். எதை வேண்டுமானாலும், மனதில் உள்ளதை அவரால் பேச முடியும். ஆனால் நான் அளந்து பேச வேண்டியிருக்கிறது. இக்கட்டான சூழல் உள்ளது. ஒரு வார்த்தை தவறிவிட்டால் என்ன வரப்போகிறது என்று வெளியே இருக்கிற தொலைக்காட்சிகள் காத்து கொண்டிருக்கின்றன. நான் உள்ளே வந்தவுடன் என்னிடம் 2 கேள்விகளை கேட்டனர். நீங்கள் சட்டபேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளீர்கள். நீங்கள் எப்படி அவரை சந்தித்து உள்ளீர்கள்? என்று கேட்டனர். நான் அவர்களிடம் கூறினேன். அதிமுகவின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்றோம். நான் மட்டும் போகவில்லை. எனக்கு இன்றைய தேவை என்னவென்றால் என் பகுதி மக்களின் நலன் தான்.
என் பகுதி மக்கள், விவசாயிகள் 2 நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்தனர். பவானி ஆற்றங்கரையோரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்படையும் வகையில் ஒரு சாயப்பட்டறை கொண்டு வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு 200 பேர் என்னிடம் மனுக்களை தந்தார்கள். அந்த மனுவை பெற்று கொண்டு சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக அங்கு சென்றேன். அதனை பெரிய செய்தியாக போய் கொண்டிருக்கிறது. செங்கோட்டையன் எப்படி சபாநாயகரை சந்தித்தார். ஒரு சட்டசபை உறுப்பினர் சபாநாயகரை சந்திப்பது என்பது சாதாரணமான நிலை. ஒத்திவைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு அரைமணிநேரத்துக்கு முன்பாக அவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆகவே அதுவெல்லாம் விமர்சனமாக இருக்கும் இக்கட்டான சூழலில் தான் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் ஒன்றும் செய்யப்போவது இல்லை. எந்த பாதை சரியாகஇருக்கிறதோ அந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என்பாதை தெளிவானது. வெற்றி முடிவானது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மகாகவி பாரதியார் சொன்னது போல், ‛‛சில வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்” என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.