அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி!

தமது தலைமையிலான அண்ணா திமுகவை யாராலும் உடைக்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் கலகக் குரல் எழுப்பி வரும் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி இந்த பதிலைத் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்- ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது 2 மணிநேரம் பேசியதாக குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினர் பேச எந்த தடையும் விதிக்கவில்லை என்றார். நாங்களும் எங்களது அதிமுக ஆட்சிக் காலத்திலும் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு எந்த தடையும் நாங்கள் விதிக்கவில்லை.

பத்திரிகையாளர்கள் எங்களைப் பிரித்து பார்ப்பதிலேயே இருக்கின்றனர். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். அண்ணா திமுகவை யாராலும் பிரிக்க, உடைக்க முடியாது. நான் முதல்வரான நாள் முதலே அதிமுகவை உடைக்க திட்டம் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்; அதை எல்லாம் நாங்கள் உடைத்து எறிந்து கொண்டுதான் இருக்கிறோம். அண்ணா திமுகவை யாராலும் உடைக்கவும் முடக்கவும் முடியாது. அப்படி முயற்சி செய்தவர்கள் மூக்கு உடைபட்டுப் போவார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.