தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மும்மொழி கொள்கை, ரூபாய் விவாதம் என்று மத்திய, மாநில அரசுகளிடையே பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியளவில் நம் பட்ஜெட்டும் ஹிட்டு. தமிழும் ஹிட் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-
பட்ஜெட் லோகோவில் மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்ட ரூ என்று குறிப்பிட்டோம். தமிழை பிடிக்காதவர்கள் அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள். ஒன்றிய அரசிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் கொடுங்கள் என்றேன். பேரிடர் நிதி கொடுங்கள்.. பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை தாருங்கள் என்று கூறினேன். அதற்கு எல்லாம் பதில் கொடுக்காத ஒன்றிய நிதியமைச்சர் மற்றதை பெரிதாக்குகிறார். அவரே பல பதிவுகளில் ரூ என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தில் ரூபாயை எளிதாக குறிப்பிட Rs என்று தான் பயன்படுத்துவார்கள். அது எல்லாம் பெரிதாக தெரியாதவர்களுக்கு இது பெரிதாக தெரிகிறது. மொத்தத்தில் இந்தியளவில் நம் பட்ஜெட்டும் ஹிட்டு. தமிழும் ஹிட்டு.
முதலமைச்சருக்கான பொருளாதார அவசர குழுவில் நோபல் பரிசு பெற்ற குழு மற்றும் அறிஞர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றோர் ஆலோசனைகளை வழங்கினார்கள். அடித்தட்டு மக்களிடம் அவர்களின் தேவைகளை கேட்டு தெரிந்துள்ளோம். மற்ற நாடுகள், மாநிலங்களில் மக்களிடம் பிரபலமான திட்டங்களை நம் மாநிலத்துக்கு தகுந்தது போல ஆய்வு செய்து செயல்படுத்தியுள்ளோம். தலைமைச் செயலகத்தில் பல நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகாரிகள், அமைச்சர்களிடம் பேசி பேசி தான் பட்ஜெட் கொண்டு வந்தோம். பிரபல நாளிதழ்களிலும் பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர். மக்களுக்கு எது பிடித்துள்ளது என்று தெரிந்து கொள்ள சமூகவலைதள பதிவுகளை பார்த்தேன். ஒரு பெண், பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை அரசே இலவசமாக தர வேண்டும் என்று என்னை டேக் செய்து பதிவு போட்டிருந்தார். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
TNBudget2025-இல் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன். தெலங்கானாவில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் திருநங்கைகளை ஈடுபடுத்தவுள்ளதாக செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்து நம் ஊர்காவல் படையில் திருநங்கைகளை ஈடுபடுத்தியுள்ளோம். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு காப்பகத்தில் உள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுத்தேன். மற்ற மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்து தாயுமானவன் திட்டம் கொண்டு வந்தோம். ஆதரவற்ற முதியோருக்காக அன்பு சோலை திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதை ஆனந்த் சீனிவாசன், சோம வள்ளியப்பன், பிரபாகர் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். இது எல்லோருக்கும் எல்லாம் பட்ஜெட்.
எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைத்தால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களின் விமர்சனத்தில் வன்மம் மட்டுமே தெரிகிறது. மற்றபடி அதில் உருப்படியாக எதுவுமில்லை. 2011 – 16 வரை கடன் வளர்ச்சி 108 விழுக்காடாக இருந்தது 2016-21 காலகட்டத்தில் 128 விழுக்காடாக இருந்தது. திராவிட மாடல் ஆட்சி பதவியேற்றதில் இருந்து தற்போதுவரை அதை 93 விழுக்காடாக குறைத்துள்ளோம். தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடன் வாங்காத அரசு இல்லை. வாங்கும் கடனை முறையாக பயன்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு தான் முதலீடு செய்துள்ளோம். அறிவித்த திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்துவோம். மாநிலத்துக்கான நிதிக்கும், நீதிக்கும் போராட வேண்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் 1 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்டி எல்லா துறைகளிலும் முதலிடத்துக்கு கொண்டு வரும் வரை ஓய்வே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.