தமிழக பாஜக சார்பில் நேற்று (திங்கள்கிழமை) நடத்தப்பட்ட டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றவர்களை துன்புறுத்திய தமிழக காவல்துறையின் செயல்பாடு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்துள்ள ரூ. 1000 கோடி உழலின் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் என்று அண்ணாமலை குற்றம் காட்டியதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழகப் பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை மற்றும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தின் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியாவில் ஊழலை அடியோடு ஒழிக்க விரும்பும் பிரதமர் மோடியின் குரல் தமிழக மக்கள் மனதில் வலுவாக ஒலிக்க துவங்கி விட்டது. டெல்லி மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமான சாராய ஊழல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கப் போகிறது.
தமிழக முதல்வர் உடனடியாக விழித்துக் கொண்டு, சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியையும் முன்னாள் சாராய அமைச்சர் முத்துசாமியையும் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். திமுக அரசின் ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை கண்டித்து ஜனநாயக முறைப்படி நேற்று பாஜக நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் எழுச்சியை நசுக்கவோ, அடக்கவோ, தடுக்கவோ முடியாமல் தமிழக அரசு திணறியதையும், காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகளையும் தமிழகமே பார்த்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதை போல, ஏழாவது முறையாக பாஜகவின் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து, பாஜக தொண்டர்கள் மீது பயங்கர அடக்கு முறையை ஏவி விட்டு, விரட்டி விரட்டி கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்து, நியாயத்தைக் கேட்க வந்த பாஜக தொண்டர்களை கிரிமினல் குற்றவாளிகள் போல மிக மோசமாக நடத்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஊது குழலாக, சட்டத்திற்கு புறம்பாக, மனித உரிமை மீறலை காவல்துறை துணிந்து அரங்கேற்றி இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நைனார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி என அனைத்து முக்கிய முன்னணி தலைவர்களையும் காவல்துறை அவமானப்படுத்தியது. அவர்களை கைது செய்கிறோம் என்று வாகனத்தில் அழைத்து சென்று அலைக்கழித்து, நடுத்தெருவில் இறக்கி விட்ட கொடுமை, காவல்துறையின் அரக்கத்தனமான செயல்கள், தமிழக அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாக காவல்துறையின் செயல்பாடுகள் அமைந்தன. இது மிக மோசமான முன்னுதாரணமாகும். தமிழகம் முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட பாஜகவினரை, மனரீதியாக துன்புறுத்தி, காவல் நிலையங்களில் குற்றவாளிகளை போல் நிற்க வைத்து புகைப்படம் எடுத்ததோடு, மிரட்டி எச்சரித்து அனுப்பிய தமிழக காவல்துறையின் செயல்பாடுகளை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத, தீய சக்தி திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டு பாஜக அமைக்கின்ற மக்கள் நல கூட்டணி தமிழகத்தை ஆளப் போகிறது. இதை நன்கு உணர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், விதவிதமான கெட்டப்களில் பேசி நடித்து வருகிறார். காங்கிரசின் மிசா காலத்தை நினைவுபடுத்தும் வழியில், “மிசா” முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
டாஸ்மாக் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை கண்டித்து அண்ணாமலை தலைமையில் பாஜக நடத்திய முற்றுகைப் போராட்டம் தமிழக மக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக ஆட்சிக்கான முடிவுரையை இது எழுதத் துவங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.