சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பெரியாரை இழிவாக விமர்சித்ததால் தமக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது சீமானுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் தந்தை பெரியாரை மிக இழிவாக விமர்சித்து மேடைகளில் பேசினார். தந்தை பெரியார், தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதி அல்ல.. சீரழித்தவர் என்றார். பெரியார், தமிழை காட்டுமிராண்டு மொழி என்றார். தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தார்; தமிழ்நாட்டு பெண்களை விரும்பிய ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என தவறாக வழிநடத்தினார் என பேசினார் சீமான். இதன் உச்சமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தந்தை பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தயாரித்து கொடுத்த வெடிகுண்டுகளை வீசுவேன் என கொலை மிரட்டலும் விடுத்தார் சீமான். சீமானின் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் சீமான் வீடு முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல மதுரை உள்ளிட்ட நகரங்களில் சீமானின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 60-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டன; இதனடிப்படையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சீமானுக்கு நேரிலும் சம்மன் கொடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தம் மீது தொடர்ப்பட்ட இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. சீமானுக்கு இது மிகப் பெரும் பின்னடைவாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தற்போதைய நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சீமான் நேரில் சென்று ஆஜராக வேண்டிய கடும் நெருக்கடியும் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.