வருத்தம் தெரிவிப்பதற்கும் மண்டி போடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என விஜய்யின் பழைய வீடியோ ஒன்றை போட்டு பதிலடி கொடுத்திருக்கிறார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு நோன்பு திறந்ததோடு இஸ்லாமியர்களுடன் தொழுகையிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு விவாதங்களை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “விஜய் இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் நாங்கள் நான்கு பேர் செல்வோம் என கூறினார்கள்” என பேசியதோடு அவதூறாக ஒரு சொல்லை குறிப்பிட்டு பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இஸ்லாமியர்களை இழிவாக பேசியதாக சமூக வலைதளங்களில் கண்டனம் அதிகரித்தது. மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய கோரி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
“முஸ்லிம்களால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என பாதுகாப்பு கேட்ட விஜய் குறித்து பேசும்போது இஸ்லாமிய மக்களை நான் இழிவுபடுத்தி விட்டதாக கூறுகிறார்கள். நான் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் வாழ்கிறேன். என் வீட்டில் அருகே மசூதி இருக்கிறது. முஸ்லிம் மக்கள் மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஒரு ஆதங்கத்தில் பேசி விட்டேன். வார்த்தை தடுமாறி இருந்தால் என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தவறாக பேசிவிட்டு வருத்தம் தெரிவிப்பதா என சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் ட்ரோல் செய்தனர். இதை அடுத்து விஜயின் பழைய வீடியோ ஒன்றை எடுத்து போட்டு வருத்தம் தெரிவிப்பதற்கும் மண்டி போடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என பதிவிட்டுள்ளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அதாவது தலைவா பட வெளியீட்டின் போது டைம் டு லீட் என்ற வார்த்தையால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதாவை சந்திக்க விஜய் அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட நிலையில் அவரை வீட்டு வாசலில் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கைகளை கட்டியபடி, அம்மாவை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறேன், விரைவில் சந்திப்பேன் என பேசியிருந்தார்.
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே தலைவா படம் வெளியான நிலையில் அதற்கு பிறகாக விஜய் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். மேலும் அதற்குப் பிறகு வெளிவந்த பல படங்களில் தன்னை அதிமுக ஆதரவாளராகவே விஜய் காட்டிக் கொண்டா. வேலாயுதம் படத்தில் ‘நல்லவேளை நான் ஆளுங்கட்சி என்ற வசனத்தையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வீடியோவை தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.