திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஏழு மாநிலங்களின் முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். மேலும், அவர்களை நேரில் சந்தித்து திமுக குழு அழைப்பு விடுத்து வருகிறது.
முன்னதாக, திமுக குழு முதல்வா் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். ஏற்கெனவே சென்னை கூட்டத்தில் தனது சார்பில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பங்கேற்பார் என கா்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், ஜோசப் கே.மணி, சமூக புரட்சி கட்சியைச் சோ்ந்த என்.கே.பிரேமசந்திரன், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா், மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சியின் பிரதிநிதி ஒருவா், அதே மாநிலத்தில் இருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலீம், ஒடிஸாவின் பிஜூஜனதா தளத்தின் பிரதிநிதி, அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பக்தசரண் தாஸ், பஞ்சாப் முதல்வா் பகவந்த்மான், அகாதலி தளம் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்பி, மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி என்விஎன் சோமு ஆகியோர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை இன்று(மார்ச் 19) நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.