அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கோரி டாஸ்மாக் உயர்நீதிமன்றத்தில் மனு!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 7 இடங்களில் மார்ச் 6 ஆம் தேதி முதல் 3 நாள்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும் அரசு கணக்கிலும் சேராமல் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாகவும் அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “டெண்டரில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. டாஸ்மாக் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை” என்றார்.

இந்த நிலையில் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சோதனையில் அமலாக்கத்துறை, டாஸ்மாக் ஆவணங்களை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.