தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேளுங்கள்: எடப்படிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு போகவேண்டும். ஓடுகிறீர்களே! என அதிமுகவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் நடந்த சம்பவம், சாத்தான் குளத்தில் நடந்த சம்பவங்களை மறந்துவிடக் கூடாது. உங்களை பொறுத்தவரை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல நான் தயாராக இல்லை, தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு போகவேண்டும். ஓடுகிறீர்களே! என பேசினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சேலம் மாவட்டம், இச்சிப்பாளையத்தை சார்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜான் என்கிற சாணக்கியன் என்பவர் உயர்நீதிமன்ற நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று கையப்பமிட்டுவிட்டு தன்னுடைய மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் தாக்கிவிட்டு தப்பி சென்றிருக்கிறார்கள். காயமடைந்த சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவருடைய மனைவி சித்தோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இது தொடர்புடைய கிச்சிப்பாளையத்தை சார்ந்த சரவணன், சதீஷ், பூபாலன் மற்றும் மைனா கார்த்திக் ஆகியவரை பச்சப்பாளி என்ற இடத்தில அவங்க காரை மறித்து கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது சதீஷ் உள்ளிட்டோர் காவல் துறையினர கொடிய ஆயுதங்களால் தாக்கினர். இதனால் சித்தோடு காவல் ஆய்வாளர் பாதுகாப்புக்காக அவரை நோக்கி சுட்டனர். இதில், சதீஷ் சரவணன் மற்றும் பூபாலனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரும் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பழி வாங்குகிற நோக்கத்தில இந்த சம்பவம் நடந்திருக்கலாம்னு முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே தமிழ்நாட்டில சட்டம் ஒழுங்க நிலைமை குறித்து இங்க சில கருத்துக்களை எதிர்கட்சி தலைவர் அவர்கள் போகிற போக்குல சொல்லிட்டு போயி உள்ளார். காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவிதமான பாரபட்சமும் இதில் காட்டப்படுவதில்லை. குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் ஒருபுறம், குற்ற சம்பவங்கள் நிகழாமல் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மறுபுறம் என இருவகையிலும் காவல்துறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினரின் நடவடிக்கை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையான இடங்களில் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 457 கைதிகள் அடையாள காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49,280 ஆக இருந்தது. 2024-இல் 31,498 ஆக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்கள் குறைத்திருக்கிறோம். சில கொலை குற்றங்கள் நடைபெறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவரும்போது அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில் எண்ணிக்கையின் அளவில் பார்க்கும்போது 2024ஆம் ஆண்டில் கொலை குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்திருக்கிறது. அதாவது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 109 கொலைகள் குறைந்திருக்கின்றன. அதேபோல் பழிக்கு பழி வாங்கும் கொலைகளின் எண்ணிக்கையும் 2024ஆம் ஆண்டில் 42.72 விழுக்காடு குறைந்து உள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டில் 181 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 150 சரித்திர பதிவேடு ரவுடிகளும், ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் கடுங்காவல் தண்டனை நீதிமன்றங்கள் மூலம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.