தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரண்டு படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களது படகுகள், மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் என அனைத்து உடைமைகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படுகின்றன. நீண்ட கால சிறை தண்டனையும், அதிகப்படியான பணம் அபாராதமாகவும் விதிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையின் தொடர் கைது சம்பவங்களால் இதுவரை 110க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுகிறார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் கூட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக ஆக்ரோஷமாக தனது வாதத்தை முன்வைத்தார். கடந்த 40 ஆண்டுகளில் 843 தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய கடற்படை மீனவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக இலங்கை கடற்படையுடன் சேர்ந்து இந்திய கடற்படையும் மீனவர்களை தொந்தரவு செய்கிறது என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மிகவும் எமோஷனல் ஆனது. அதே சமயம் இந்திய கடற்படை மீது குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார். வைகோ இந்திய கடற்படை குறித்து பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மேலும் 10 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரு தினங்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.