தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன்!

“தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள்தான்” என தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று (வியாழன்கிழமை) சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் பக்தர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆனால், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முருகனின் அருள் திமுக அரசுக்கு உள்ளதாக கூறுகிறார். அப்படியென்றால் இஃப்தார் நோன்பு திறப்பு மற்றும் தேவாலயங்களுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முருகன் கோயிலுக்கு வர தயங்குவது ஏன்?

மத்திய அரசு அறிவிக்காத தொகுதி மறுவரையறைக்கு குழுவை அனுப்பியுள்ள தமிழக முதல்வர் காவிரி பிரச்சனை – மேகதாது அணை விவகாரத்தில் ஏன் குழுவை அனுப்பி தீர்வு காண முயற்சிக்கவில்லை?

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 40 கொலைகள் நடந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அங்கே கொலை செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நன்றாக இருப்பதாக கூறுகிறார். தமிழகத்தில் தோல்விகளை மறைப்பதற்காகவே இல்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தலைநகரமா அல்லது கொலை நகரமா என தெரியவில்லை. அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், தங்களது கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்களா? அபாயகரமான சூழ்நிலையில் தமிழகம் உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இன்று என்ன திட்டம் வெளிவரப் போகிறது என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் இன்று என்ன வீடியோ வெளி வரப்போகிறது என எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இதை எதையுமே சட்டை செய்யாத முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சட்டையை மட்டும் மாற்றி மாற்றி அணிந்துகொண்டு பேட்டியளிக்கிறார். கொடுக்கிற பணத்தை முறையாக செலவு செய்வதில்லை.

பணம் கொடுக்கிறோம் என்றால் இவர்கள் சுய கவுரவம் பார்த்து இந்த திட்டத்தை வேண்டாம் என சொல்ல வேண்டியது, ரூ.2,000 கோடி கல்விக்கு கொடுப்பதாக தெரிவித்தால் இல்லாத இந்தி தினத்தை எடுத்துக்கொண்டு இரு மொழிக் கொள்கைதான் வேணும் என்கிறார்கள். மூன்று மொழி படிப்பது எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் போது மத்திய அரசு பணம் தர தயாராக இருக்கும்போது ஏன் இப்படி செய்கிறீர்கள் என தெரியவில்லை.

தமிழக அரசு தமிழுக்காக தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதற்காக எத்தனை பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது என சொல்ல முடியுமா? இன்று தமிழகத்தில் எத்தனை கல்வி நிலையங்களில் தமிழ் வழி கல்வி உள்ளது எனக் கூற முடியுமா? தமிழ் தேர்ச்சி விகிதம் குறைவது குறித்து தமிழ் தமிழ் என வாயில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் செயலில் எதையும் செய்யவில்லை. 40,000 குழந்தைகள் தமிழில் தேர்ச்சி பெறவில்லை, 50 ஆயிரம் குழந்தைகள் மொழி பாடத்திலேயே பரீட்சைக்கு வரவில்லை, தமிழை கீழே தள்ளிவிட்டு ஆங்கிலத்தை ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் தமிழை ஆராதிக்க பழகுங்கள். முதல்வர் முதலில் தமிழ்நாடு மீது அக்கறை செலுத்த வேண்டும் அதன் பிறகு மாநில மாநிலமாக போகலாம்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரி இல்லை. ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் தமிழகத்தின் மீது முதலில் அக்கறை காட்ட வேண்டும். மாறாக, தமிழகத்தின் தோல்வியை மறைக்க தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என திசை திருப்புகிறார். பாஜக தமிழ் மொழிக்கு எதிரானது அல்ல, பிரதமர் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்துபவர், பாஜகவில் உள்ள நாங்களும் தமிழர்கள்தான். தமிழகத்தில் மக்களவை தொகுதியை குறைத்தால் அதை நாங்களே ஏற்றுக் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.