சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் சேகர்பாபு கோபப்படுவது ஏன்?: வேல்முருகன்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் அமைச்சர் சேகர்பாபு கோபப்படுவது ஏன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

சட்டப்பேரவையில் வேல்முருகன் பேச்சுக்கு சபாநாயகர், அமைச்சர் சேகர்பாபு, அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ’வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார்’ என முதலமைச்சர் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தெலங்கானாவில் உள்ள சிபிஎஸ்சி, ஐசிஎஃப் உள்ளிட்ட பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கை படிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது போன்று தமிழக அரசும் உத்தரவிட வேண்டும் என சட்டமன்றத்தில் பதிவு செய்தேன். நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ளாமல் அதிமுக எம்.எல்.ஏக்களும், சேகர்பாபுவும் கத்தினர். நான் பேச வாய்ப்பு கேட்டு போராடினேன். வாய்ப்பு மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பேரவைத் தலைவர் முன்பாக சென்று வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்களோ, அதே போல் நானும் பேரவைத் தலைவர் முன்பாக சென்று பேச அனுமதிக்க சொல்லி கேட்டேன்.

அதற்கு சேகர்பாபு ‘நீ முந்திரி கொட்டை போல் முந்தி பேசுகிறாய்’ என ஒருமையில் பேசினார். நான் அவரிடம் ”ஒருமையில் இப்படி பேசக் கூடாது. கலைஞர் ஆட்சியில் போட்ட அரசாணையை 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக வழக்குத் தொடுத்து நடைமுறைப்படுத்தியவன் வேல்முருகன்” என்று சொன்னேன்.

வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார் என்று சேகர்பாபு சொன்ன அதே வார்த்தையை முதலமைச்சர் சொன்னது எனக்கு வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் அவர்களே உங்கள் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பாடமொழி, பயிற்சி மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போடார். கடந்த கால ஆட்சியில் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தவில்லை. ஓபிஎஸ் இருக்கும் போது டிஎன்பிஎஸ்சி தேர்வை இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவிட்டார்கள். அதை நான் எதிர்த்து போராடினேன். அதிமுக ஆட்சியில் இவ்வளவு பெரிய அநியாயம் ஏற்பட்டு உள்ளது. இது அதிமுக ஆட்சி தமிழர்களுக்கு செய்த மாபெரும் துரோகம். அதிமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டும் போது அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சேகர்பாபு அதிமுக முன்னாள் அமைச்சரோடு நெருக்கமாக உள்ளார். அதிமுகவை காப்பாற்ற என் மீது குற்றம்சாட்டுகிறார். அதை நான் முதலமைச்சரிடம் சொல்லி சட்டத்திருத்தம் கொண்டு வந்தேன்.

கவர்னர் வரும் போது சபாநாயர் இருக்கை முன் பாதாகை பிடிக்க அனுமதிக்கிறீர்களே! அது மரபு மீறிய செயலா?, நான் தகராறு செய்யவில்லை. என் தாய் மொழி தமிழ் ஆட்சிமொழியாகவும், அலுவல் மொழியாகவும் இல்லை. என் நோக்கம் தகராறு செய்வது இல்லை. முதலமைச்சர் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரினேன். துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வராத கோபம் ஏன் சேகர்பாபுவுக்கு வருகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் சேகர்பாபுவுக்கு கோபம் வருவது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.