தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில நொடிகள்கூட நிலையாக இல்லாதவர் பிகாரை மீண்டும் மீண்டும் அவமதிப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிகார் மாநிலம் பாட்னாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் இருந்த தலைமைச் செயலாளரிடம் நிதிஷ் குமார் சிரித்து பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இதனைப் பகிர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த தேஜஸ்வி யாதவ், ”குறைந்தபட்சம் தேசிய கீதத்தையாவது அவமதிக்காமல் இருங்கள். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை நாள்தோறும் அவமதிக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வர் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். சில நொடிகள்கூட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலையாக இல்லை, நீங்கள் மயக்க நிலையில் இருப்பது மாநிலத்துக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம். பீகாரை மீண்டும் மீண்டும் இப்படி அவமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய கீதத்தை அவமதிப்பதை நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.