கடலூரில் மார்க்சிஸ்ட் சண்முகத்தை தரதரவென இழுத்து சென்ற போலீஸ்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சண்முகத்தை போலீசார் தரதரவனை இழுத்துச் சென்றதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுக தலைமையில் தமிழகத்தில் மெகா கூட்டணி வெற்றிகரமாக பயணித்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு ஈஸ்வரனின் கொமதேக, முஸ்லீம் லீக், தமுமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்தன. தற்போது வரை அனைத்து தேர்தல்களையும் இந்த கூட்டணி நேரடியாக சந்தித்து வெற்றியும் பெற்று இருக்கிறது. முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக சண்முகம் இருந்தபோது திமுகவை வெளிப்படையாக விமர்சித்து பேசினார். அதற்கு பிறகு சில நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் பல்வேறு விவகாரங்களில் திமுக தலைமையை தமிழக அரசையும் நேரடியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக விவசாயிகள் போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம், கொடிக்கம்பம் அகற்றும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நேரடியாக விமர்சித்து வருகிறார்.

நேற்று கூட நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி திமுக கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசி இருந்த சண்முகம், “திமுக தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எங்களைப் போன்ற கட்சிகளை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அல்லது தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அகற்றிக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளது தவறானது. திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என பேசி இருந்தார்.

இந்த நிலையில் அதற்கு அடுத்த நாளே திமுகவுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் மோதல் வெடித்து இருக்கிறது. கடலூரில் முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் நான்கு கிராம விவசாயிகள் உடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு 160 ஏக்கர் அரசு நிலத்தில் முந்திரிக்காடுகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதே இடத்தில் முந்திரிக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் அங்கு திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும் மறுப்பு தெரிவித்து விவசாயிகளும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேட்டி அளித்துக் கொண்டிருந்த சண்முகம் உள்ளிட்டவரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்றனர். அப்போது சண்முகத்தை போலீசார் தாக்கியதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே மோதல் வெடித்திருக்கும் நிலையில் கடலூர் சம்பவத்தின் மூலம் மேலும் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.