சென்னை மாநகராட்சிக்கும் மத்திய அரசு நிதி தரவில்லை: மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய 350 கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என மேயர் பிரியா குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் மொத்த வரவு ரூ.8,267.17 கோடியாகவும், மொத்த செலவு ரூ.8,404.7 கோடியாகவும் இது மதிப்பிடப்பட்டு உள்ளது. இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட் ஆகும், அதாவது செலவு வரவை விட அதிகமாக உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிதி உதவி எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மீதான விவாதம் இன்று மாமன்றக் கூட்டத்தில் நடைபெற்றது. இதில் பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், “சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்திய பின்பும் கூட சென்னை மாநகராட்சி சார்பில் பற்றாக்குறை பட்ஜெட் போடப்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் நிதி மேலாண்மையில் தோல்வி ஏற்பட்டு உள்ளது” என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகாராட்சியின் சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே நிதி வழங்குவோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரியை கட்டாயம் உயர்த்தி ஆக வேண்டும், அப்படி உயர்த்தினால் மட்டுமே நிதி கிடைக்கும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதற்கான ஆவணங்களை மத்திய அரசிடம் சமர்பித்தும் கூட மாநகராட்சிக்கு தர வேண்டிய 350 கோடி ரூபாயை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை இதனால்தான் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை நிதி பற்றாக்குறை உள்ளது. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், மத்திய அரசிடம் பேசி நிதியை பெற்றுத்தர வேண்டும் என கூறினார்.