வடமாநிலத்தவர்கள் பன்றி குட்டிப் போட்டதை போல் போட்டு மக்கள் தொகையை அதிகரித்துவிட்டார்கள் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பாக ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன், சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் தாமோ அன்பரசன் வடமாநிலத்தவர்கள் குறித்து பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியதாவது:-
வடமாநிலத்தில் இருப்பவர்கள் பன்றி குட்டிப் போட்டது போல் போட்டு, மக்கள் தொகையை அதிகரித்துள்ளார்கள். இப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு என்று கூறுகிறார்கள். இதனால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. 1960களில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவுக்கு பின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் என்றார்கள். பின்னர் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றார்கள்.
தென் மாநிலங்கள் சரியாக அந்த திட்டத்தை செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்துள்ளோம். ஆனால் வடமாநிலத்தவர்கள் அப்படியில்லை. இதனால் தென் மாநிலங்களில் மட்டும் சுமார் 40 தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், தென் மாநிலங்களில் பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை. இங்கே தொகுதியை குறைத்துவிட்டால், வடமாநிலங்களில் தொகுதியை அதிகரித்து நாமே ஆட்சியில் இருக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்விக்காக மட்டும் ரூ.2,150 கோடியை மத்திய அரசு கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.