முல்லைப் பெரியாறு குறித்து கேரள முதல்வருடன் ஸ்டாலின் பேசுவாரா?: எச். ராஜா!

சென்னை வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், அம்மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்தும் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுவாரா? என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிற கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்திற்குள் கொட்டாதீர்கள் என்றும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முடிவை கைவிடுங்கள் என்றும், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை நாங்கள் சகோதரத்துவ உணர்வோடு கேரள மாநிலத்திற்கு வழங்கி வருகிறோம். அதுபோல் கேரளாவில் ஆண்டுதோறும் கடலில் வீணாகக் கலக்கும் 2000 டிஎம்சி தண்ணீரில் ஒரு 200 டிஎம்சி தண்ணீரை நீங்கள் சகோதரத்துவ உணர்வோடு தமிழகத்திற்கு வழங்க முன் வாருங்கள் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவாரா?

தமிழகத்தின் நலன் மீது உண்மையிலேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இருக்குமானால் மேலே நாம் குறிப்பிட்டுள்ள விஷயங்களை, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் நிச்சயம் அவர் வலியுறுத்துவார், அதுகுறித்துப் பேசி இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு மாநில உறவுகளை மேம்படுத்த முயற்சி எடுப்பார் என எதிர்பார்க்கலாம். தமிழகத்தின் நலன் மீது தமிழக முதல்வருக்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்பதை நாம் பொருத்திருந்து பார்க்கலாம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.