கர்நாடகாவில் தொடங்கியது கன்னட அமைப்புகளின் பந்த்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக கண்டக்டரை மராத்தி மொழியில் பேச கூறி தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று காலை 6 மணிக்கு கர்நாடகாவில் பந்த் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் உள்ள மாவட்டம் பெலகாவி. இந்த மாவட்டம் என்பது கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா அரசு பஸ் ஒன்று பெலகாவியில் இருந்த பாலேகுந்திரி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பெண் ஒருவர் மராத்தியில் பேசி டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரி, ‛‛எனக்கு மராத்தி மொழி தெரியாது. கன்னடத்தில் பேசுங்கள்” என்று கூறினார். இது பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போது மராத்தி மொழி பேசுவோர் கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரியை தாக்கினர். இது பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெலகாவியில் போராட்டங்கள் வெடித்தது. இதனால் கர்நாடகா – மகாராஷ்டிரா இடையேயான பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கண்டக்டர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் பெலகாவியில் செயல்பட்டு வரும் மராத்திய அமைப்புகளான மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி கர்நாடகாவில் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையோர கிராம கன்னட மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தான் பிரதானமாக உள்ளது. இந்த பந்த் போராட்டத்தை கன்னட ஒக்கூடா எனும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணிக்கு மாநிலத்தில் பந்த் போராட்டம் தொடங்கியது. மாலை 6 மணி வரை இந்த பந்த் நடைபெற உள்ளது. அரசு, தனியார் வாகனங்களை இயக்க வேண்டாம். கடைகள், ஓட்டல்களை அடைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வழக்கம்போல் மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தினர் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இன்றைய தினம் நிலைமை மாறிப்போனது.

கேஎஸ்ஆர்டிசி எனும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் இயங்கி வருகின்றன. அதேபோல் பிஎம்டிசி என அழைக்கப்படும் பெங்களூர் மாநகர அரசு பஸ்கள் பெங்களூர், பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வருகிறது. அதேபோல் ஓலா, உபர், கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்ஷா சங்கங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை கார்கள் இன்று குறைந்த அளவில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக பெலகாவியை மையப்படுத்தி பந்த் நடக்கும் நிலையில் அங்கு கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் தடையின்றி இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் – கர்நாடகா இடையேயும் பஸ் சேவை வழக்கம்போல் உள்ளது.

இந்த பந்துக்கு கர்நாடகா அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்க உள்ளது. அதேபோல் கன்னட திரைத்துறை, ஹோட்டல் துறையினரும் பந்த்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். தியேட்டர்களில் காலை முதல் மதியம் வரை திரைப்பட காட்சிகள் ரத்து செய்யபப்பட்டுள்ளன. இதனால் ஹோட்டல்கள் குறைந்த அளவில் திறக்கப்பட்டுள்ளளது. இருப்பினும் கூட மாநிலத்தில் பல்வேறு கன்னட அமைப்பினர் உள்பட பல்வேறு தொழில் சங்கங்கள் உள்ளன. இதில் சில அமைப்புகள் பந்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தான் இந்த பந்த் பிசுபிசுத்துப்போய் உள்ளது. பல மாவட்டங்களில் கடைகள், ஹோட்டல்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் என்பது இயங்கி வருகின்றன.

பெங்களூரை எடுத்து கொண்டால் சுதந்திர பூங்காவில் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் மறியல், பேரணி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் காலையிலேயே புறப்பட்டு செல்கின்றனர். மேலும் கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையான பெலகாவியில் கன்னட அமைப்பினர் கடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் இருமாநிலங்கள் இடையேயான போக்குவரத்து என்பது இன்று பாதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கர்நாடகாவிற்குள் இயல்பு நிலையே நிலவி வருகிறது. மகாராஷ்டிரா அரசு பஸ்கள் கர்நாடகாவிற்கும் வராது. இந்த பந்த் போராட்டத்தையொட்டி பெலகாவி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.