திமுக நிர்வாகிகள் நாவை அடக்கி பேச வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்!

திமுகவினர் நாவை அடக்கி பேச வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

திமுக இல்லையென்றால் தமிழகத்தில் யாரும் படித்திருக்க முடியாது என சொல்கிறார்கள். அப்படியென்றால், தமிழக மக்களின் அறிவை அவர்கள் குறைத்து மதிப்பீடுகிறார்களா? எனது அப்பாவின் கோட்டாவில் நான் மருத்துவம் படித்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்போது, உதயநிதி எந்த கோட்டாவில் அரசியலுக்கு வந்தார்? ஆர்.எஸ்.பாரதி ஒருமையில் என்னைப் பற்றி பேசுகிறார். பெண்கள் என்றால் அவர்களுக்கு அவ்வளவு கேவலமாக போய்விட்டதா? திமுகவினர் முதலில் நாவை அடக்கி பேச வேண்டும்.

வடமாநிலத்தவர்கள் யாசகம் எடுக்கிறார்கள். பீடா விற்கிறார்கள் என்கிறார்கள். அவர்களும் ஒரு மாநிலத்தை சார்ந்தவர்கள்தான். இந்திய நாட்டின் சகோதர சகோதரிகள்தான். திமுகவினர், தங்கள் மாநிலத்தை பெருமையாக பேசலாம். அதே நேரத்தில் மற்றொரு மாநிலத்தை குறைத்து பேசக்கூடாது. திமுகவினர் சகோதரத்துவத்துடன் வாழ பழக வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கப்படாது என சொல்கிறோம். ஆனால், தமிழகத்தில் தொகுதி குறையும் என திமுக மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி வருகிறது. டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலினின் படத்தை பாஜக மகளிர் அணியினர் ஒட்டி வருகின்றனர். இதனால், ஆத்திரம் அடைந்த திமுகவினர், கழிவறையில் பாஜக தலைவர்களின் படங்களை ஒட்டுகிறார்கள். கழிவறைக்கு சென்றால் யாருடையை உடல் நலமும் பாதிக்கப்படாது. அதனால், நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. டாஸ்மாக் சென்றால் உடல் நலம் கெடும். அந்த புத்தி திமுகவினருக்கு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.