சில கோமாளிகளின் கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்: செந்தில் பாலாஜி!

அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு அவர் பேசியதும், 2024 ஆம் ஆண்டு அவர் பேசியதும் என்னுடைய செல்போனில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு அவர் பேசும்போது மதுவிலக்கு என்பதே சாத்தியமில்லை என்று கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் மதுவிலக்கு வந்துவிடும், கடைகளை மூடி விடுவோம் என்றும், அரசு நிகழ்ச்சிகளில் சில கோமாளிகளின் கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை நவஇந்தியாவில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

திமுக அரசு பொறுப்பெற்றது முதல் 2 லட்சத்து 43 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பணி நியமனம் பெற்றுள்ளனர். கோவையில் 10 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் தான். வாக்களித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் என அனைத்து தொகுதிகளும் ஒருசேர பயன்பெறும் வகையில் பணிகளை செய்யும் முதல்வரை நாம் பெற்றிருக்கிறோம். கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல்வர் அதனை திறந்து வைக்க உள்ளார். 167 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது. கோவையில் 4,61,000 பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். கோவையில் 98 கோடி இலவச பயணத்தை மகளிர் மேற்கொண்டுள்ளனர் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலை தேடுபவர்களுக்கும், வேலை கொடுப்பவர்களுக்கும் பாலமாக உள்ளது. நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகிறார். வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். நமக்கு தேவையானதைவிட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. கோடைகாலத்தை சமாளிப்பதற்கு என்ன கூடுதல் தேவை ஏற்படுகிறதோ அது டெண்டர் மூலமாக பெறப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வெப்பத்தின் காரணமாக எங்கேனும் ஓரிடத்தில் மின் பழுது ஏற்பட்டால், அதனை அதிமுகவும் பாஜகவும் குற்றச்சாட்டாக கருதி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என்று பார்க்கிறார்கள். பழுது ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்வதற்கு போதிய ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தன்னிறைவு பெற்ற மாநிலமாக அமையும். மின்சாரத் துறையைப் பொருத்தவரை 7000 மெகாவாட் தெர்மல் பிளான்ட் போடுவதற்கான திட்டங்களை மின்சார வாரியம் முன்னெடுத்துள்ளது. 14,500 மெகாவாட் பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டம் முன்னெடுத்துள்ளது. 2,000 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு, அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு அவர் பேசியதும் 2024 ஆம் ஆண்டு அவர் பேசியது தொடர்பான வீடியோ என்னுடைய செல்போனில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு அவர் பேசும்போது மதுவிலக்கு என்பதே சாத்தியமில்லை என்று கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் மதுவிலக்கு வந்துவிடும். கடைகளை மூடி விடுவோம் என்று கூறுகிறார். தயவுசெய்து அரசு நிகழ்ச்சிகளில் சில கோமாளிகளின் கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரே மாதிரி பேசுபவர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றார்.

மேலும், தொகுதி மறு வரையறை என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அநீதியை ஏற்படுத்தும். அதாவது நம்முடைய குரல் டெல்லியில் ஒலிக்கும் பொழுது அந்தக் குரலை கேட்பதற்கு நபர்கள் இல்லாமல் போய்விடும். வாக்களித்தவர்களின் உரிமையை காப்பாற்றுகின்ற இடத்தில் முதலமைச்சர் இருக்கிறார். இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய ஆளுமை மிக்க தலைவராக இதனை முன்னெடுத்து இருக்கிறார். இதற்கு பிற மாநில அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.