வறுமை ஒழிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை, உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தீவிர முனைப்புடன் பிரதமர் மோடி செயல்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்கள் தொகையில் 82 சதவீதத்தினருக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதேபோல, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் உறுதி திட்டமும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது. இதன்மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்து மீட்கப்பட்டனர். இது மன்மோகன்சிங் ஆட்சியின் சாதனை என்று உலக நாடுகள் பாராட்டின.

இதுகுறித்து சமீபத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை ஒதுக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த இரு திட்டங்களையும் முடக்குகிற வகையில் பாஜக அரசு செயல்படுகிறது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உணவு தானியங்கள் வழங்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் மக்கள் தொகையில் 81.35 சதவீதம் பேர் பயனடைந்து வருகின்றனர். அங்கன்வாடி திட்டத்தின் கீழ் கூடுதலாக 11 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காத நிலையில் விடுபட்டவர்களையும் சேர்த்து மேலும் 22 கோடி பேர் பயனடையக் கூடிய வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது.

எனவே, இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை பிரதமர் மோடி தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.