பாஜக ஒரு பியூஸ் போன பல்ப், திமுகவை மிரட்டி பார்ப்பது போல மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். இதற்கெல்லாம் பயப்படும் கட்சி திமுக கிடையாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் அன்னம் தரும் அமுத கரங்கள் என்ற நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாஜக ஒரு பியூஸ் போன பல்பு. அது ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும். ஊழலை மறைக்கதான் திமுக இந்தி திணிப்பை எதிர்ப்பதாக அமைச்சர் அமித்ஷா கூறுவது ஏற்புடையது அல்ல. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை என அனைத்து ஏஜென்சிகளையும் வைத்து பாஜக தமிழகத்தில் சுற்றித் திரிகிறது. ஆனாலும் எந்த ஊழலை அவர்கள் கண்டுபிடித்தார்கள்? நீதிமன்றமே அமலாக்கத் துறையின் இந்த செயலை கண்டித்துள்ளது. திமுகவை மிரட்டி பார்ப்பது போல அமித்ஷா பேசுகிறார். ஆனால் நம் முதல்வர் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உயிரே போனாலும் துணிந்து நிற்பேன் என தெரிவித்துள்ளார். ஆகவே மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் பயப்படும் கட்சி திமுக கிடையாது. அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளை தோழமை கட்சி போல பாஜக வைத்துள்ளது. இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்