சொந்த நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை?: சீமான்!

இன்று 22.03.25 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் கடற்கரை மாநகராம் இராமேசுவரம் – தங்கச்சிமடத்தில் நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

உலகின் தலைசிறந்த புரதச்சத்து அதிகமுள்ள உணவான மீன் உணவினை மனிதர் யாவர்க்கும் பெற்றுத்தரத் தங்கள் இன்னுயிரைப் பணயமாக வைத்து, பெரும்பணி புரிபவர்கள் தொல்குடி மீனவ மக்களாவார். அதிலும் உலகின் முதல் மாந்த இனமான தமிழ்ப்பேரினத்தில் பிறந்த மீனவ மக்களுக்கு நீண்ட பெரும் வரலாறும், வாழ்வியலும் உண்டு. அத்தகு பெருமைமிகு தமிழ் மீனவர்கள், இன்றைக்கு மீன்பிடித்தொழிலையே முற்றாகக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரமாகும்.

ஆர்ப்பரிக்கும் அலைகடல் மீது முட்டிமோதி, கை வலிக்க, கண் நோக கலம் செலுத்தி, கடல் சீற்றம், புயல், மழை என இயற்கைப் பேரிடர்கள் யாவையும் தாங்கி, ஒவ்வொரு நாளும் கடலுக்குள் செல்லும் உலகில் எல்லா மீனவர்களும் தங்கள் உயிரை விலையாக வைத்தே மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், தமிழ் மீனவர்களுக்கு மட்டும்தான் இயற்கை பேரிடர்களையும் தாண்டி, இலங்கை கடற்படையின் இனவெறிக்குப் பலியாகும் பேராபத்தும் உள்ளதெனத் தெரிந்தும், அதையும் எதிர்கொள்ளத் துணிந்தே கடலுக்குச் செல்ல வேண்டிய பெருங்கொடுமையான நிலையுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்துவது, மீன்களைக் கடலில் கொட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, வலைகள் அறுக்கப்பட்டு, படகுகள் பறிக்கப்பட்டு தமிழனாய் பிறந்துவிட்டதற்காக எம் மீனவச்சொந்தங்கள் இலங்கை கடற்படையால் படும் இன்னல்கள் வார்த்தைகளில் சொல்லி மாளக்கூடியதல்ல.

நடுக்கடலில் வலை விரித்தால் மீன்களுக்குப் பதிலாக மீனவர் பிடிபடுவது உலகில் தமிழினத்திற்கே நடக்கின்ற கொடுமையாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் இந்த மனிதப் பேரவலத்திற்கு யார் பொறுப்பு?

உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, இலங்கை கடற்படை தாக்க வரும்போது தடுத்து, இதுவரை ஒரே ஒரு தமிழ் மீனவரை கூடக் காப்பாற்றாதது ஏன்?

உலகில் எந்த நாட்டு இராணுவமும் தம் சொந்த நாட்டு மீனவரை இப்படி சுட்டுக்கொல்வதை வேடிக்கைபார்க்குமா? இலங்கை கடற்படையிடமிருந்து நாட்டுக் குடிகளைக் காப்பாற்றத் திறனற்ற இந்தியாவிற்கு எதற்குக் கடற்படை?

குஜராத் மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றால் கொதித்தெழுந்து கொலை வழக்குப் பதிந்து, போர் முழக்கமிட்டு ஐ.நா.மன்றம் வரை அபாய மணியடிக்கும் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள், இதுவரை 800க்கும் மேற்பட்ட எம் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட போதிலும் எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கடந்து செல்வது ஏன்?

தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால் தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? தமிழராய் பிறந்ததைத் தவிர எம் மீனவர் செய்த பிழை என்ன?

ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வேறெந்த மாநில மீனவரையும் சுட்டுக்கொல்லாதபோது, தமிழக மீனவரை மட்டும் இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லும் காரணம் இனவெறி அல்லாது வேறென்ன?

எல்லை தாண்டி மீன் பிடித்தது குற்றம் என்கிறீர்கள்? எங்கள் எல்லையை எடுத்துக்கொடுத்து யார் குற்றம்? தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது யார் குற்றம்? பிரிக்க முடியாத நடுக்கடலில் எல்லைக்கோட்டை வகுத்தது யார் குற்றம்?

ஈழத்தாய் நிலத்தில் தலைவர் பிரபாகரன் படையோடு வலிமையாய் நின்றவரை, தமிழக மீனவரை தினம் தினம் சிறைபிடிக்கும் இப்படியொரு இழிநிலை இருந்ததில்லையே?

காவிரி உரிமையை, கல்வி உரிமையைத் தாரை வார்த்ததைப் போல, 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 அன்று, அம்மையார் இந்திராகாந்தி அரசு கச்சத்தீவு உரிமையையும் இலங்கைக்குத் தாரைவார்க்கும்போது, கைகட்டி வேடிக்கை பார்த்துத் துரோகமிழைத்தது ஐயா கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக அரசு.

தற்போது, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 74 மீனவர்கள், 2021 ஆம் ஆண்டு 143 மீனவர்களும், 2022 ஆம் ஆண்டு 229 மீனவர்களும், 2023 ஆம் ஆண்டு 220 மீனவர்களும், 2024 ஆம் ஆண்டு 528 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு, இதுவரை 10 முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் 78 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1250க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் இப்போதும் 110 மீனவர்கள் உள்ளனர். இன்னமும் மீட்கப்படாமல் 228 படகுகள் பறித்து வைக்கப்பட்டுள்ளன.

இங்கு, கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறதே தவிர, மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க இதுவரை எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இங்கு, பறிக்கப்பட்ட படகுகளுக்குத்தான் இழப்பீடு வழங்கப்படுகிறதே தவிர, படகுகள் பறிக்கப்படாமல் பாதுகாக்க வழியென்ன? எந்த ஒரு தமிழ் மீனவரும் இலங்கை கடற்படையால் கொல்லப்படாமல் தடுக்கத்தான் ஓர் அரசு வேண்டுமே தவிர, கொல்லப்பட்ட பிறகு மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க எதற்கு ஓர் அரசு?

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்நாட்டு மீனவர்களை இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்வதை நாம் பொறுத்துப்போகிறோம்?

போராடி, போராடிச் சோர்ந்து போயுள்ள நம் மீனவச்சொந்தங்கள் படும் துயரத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் வேடிக்கைபார்க்கப் போகிறோம்? எப்போதுதான் இதற்கு நிலைத்த தீர்வு காணப்போகிறோம்?

தண்ணீர் கடலில் மிதக்கும் படகைப்போல, கண்ணீர் கடலில் மிதக்கும் நம் மீனவரின் வாழ்வில் சூழ்ந்துள்ள துயர இருள் விடிவது எப்போது?

மீனவர் சிக்கலுக்கு மீனவரே போராடிச்சாக வேண்டுமென்றால் உறவாய், இனமாய் உயிரோடு நாம் வாழ்வதெதற்கு?

ஆகவே, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள கச்சத்தீவு வழக்கை விரைவு படுத்தி, கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘மீன் பிடிப்பது எங்கள் பிறப்புரிமை, அதைப் பாதுகாப்பது அரசின் கடமை’ என்ற கொள்கை முழக்கத்தோடு, இன்று 22.03.25 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் கடற்கரை மாநகராம் இராமேசுவரம் – தங்கச்சிமடத்தில் நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது.

தமிழ் மக்களுக்காக எப்போதும் போராட்டக்களத்தில் நிற்கும் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்கும் இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், என் பேரன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகள், நம் மீனவச் சொந்தங்களைப் பாதுகாக்க பெருந்திரளாகப் பேரெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மீனவ மக்கள் வாழ்வுரிமை!
தமிழர் எங்கள் பிறப்புரிமை!

கச்சத்தீவை மீட்க வேண்டும்!
கடல்தாயின் பிள்ளையை காக்க வேண்டும்!

மீன்பிடித்தொழிலை உயர்த்த வேண்டும்!
மீனவர் கண்ணீரைத் துடைக்க வேண்டும்!

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.