மநீம செயற்குழு கூட்டத்தில் பேரவை தேர்தல் குறித்து கமல் ஆலோசனை!

2026 சட்டப்பேரவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர்களான ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் விரிவான ஆலோசனை நடத்தினார். காலை 11.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டு இருந்தபோதும், இப்போதே அதற்கான உழைப்பைத் தொடங்க வேண்டும் என்றும் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், திமுக கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்டுப்பெறுவது மற்றும் தேர்தல் பிரச்சார உத்தி குறித்தும் கூட்டத்தில் கமல்ஹாசன் விரிவாக பேசியதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் விரைவில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவில் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்றத்தில் விரைவில் நமது குரல் ஒலிக்கும் என்றும் 2026 சட்டப்பேரவையில் நமது குரல்கள் ஒலிக்கும் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.