நிர்மலா சீதாராமனுக்கும் பாஜகவுக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி!

தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்பதை ஏரளனமாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பாஜகவுக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி எம்பி கூறியதாவது:-

நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன், ஒரு நிமிடம் சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனரஞ்சகமாக நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. நீங்க என்ன கொடுக்கிறீங்க என்ற வாதமே தப்பு.. அவங்க எடுக்கிற கால்குலேஷன் எங்க இருந்து வருதுன்னே புரியலை.. ஒருவிதமாக கொஞ்சம் ஏரளனமாக சொல்லனும்னா.. இங்க நிறையேபேர் கோயம்புத்தூர் காரங்க இருக்காங்க.. சென்னைக்காரங்க நீங்க எல்லாம் இருக்கீங்க.. கோயம்புத்தூரும் சென்னையும்தான் தமிழ்நாட்டுக்கு வரி கொடுக்குது.. அரியலூரில் இருக்கிறவங்களும் கோவில்பட்டியில் இருக்கிறவங்களும் எங்களுக்கு என்ன செலவு பண்றீங்கன்னு கேட்பாங்க.. இதற்கு கோயம்புத்தூர்காரங்களும் சென்னைகாரங்களும் நாங்கதான் வரி கொடுக்கிறோம்.. எங்களுக்குத்தான் திருப்பி கொடுக்கனும்னு.. கோவில்பட்டி எக்கேடுகெட்டா எனக்கு என்ன? நீங்க செலவு பண்ணாதீங்கன்னு சொல்லுவாங்க.. பாரத நாட்டில் அப்படியான பாலிசி இல்லை.. அதனால இந்த மாதிரி குதர்க்கமாக பேசக் கூடியவங்களுக்கு நான் சொல்றேன். இதெல்லாம் வெச்சுதான் தமிழ்நாட்டுக்கு என்ன வந்துகிட்டு இருக்குன்னு சொல்கிறோம். தமிழ்நாட்டில் செய்வதற்கு இன்னும் எத்தனையோ இருக்கிறது என்றாலும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என நம்மை திசை திருப்புகிற முயற்சிகள் நிறைய நடைபெறுகின்றன என்றார்.